India

“ஒரு சிறந்த ஆட்சியாளராக வரலாற்றில் இடம்பெற விரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘The Economist’ புகழாரம்!

ஒரு சிறந்த ஆட்சியாளராகவரலாற்றில் இடம்பெற விரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்திறன் மிக்க தலைவர்” என்று புகழ்பெற்ற “தி எகனாமிஸ்ட்” ஆங்கில ஏடு, “மீட் திராவிடியன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளது.

‘தி எகானமிஸ்ட் - செய்திகளையும் கருத்துரைகளையும் வழங்குவதில் உலகின் தலை சிறந்த இதழ்களுள் ஒன்றாக விளங்குகிறது' - இப்படிச் சொல்கிறது பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம். அரசியல், சமகால நிகழ்வுகள், வணிகம், தொழில்நுட்பம் என்பவை ‘எகானமிஸ்ட்' வார இதழின் பேசுபொருட்கள். அவை பரப்பிலும், தரத்திலும் சர்வதேச அளவீடுகளைக் கொண்டவை.

லண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ‘எகானமிஸ்ட்' இதழுக்கு - அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா என, எங்கெணும் ஆசிரியர்கள் உள்ளனர். 177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அச்சிதழ், இப்போது இணையப் பத்திரிகையாகவும் - குரல் பத்திரிகையாகவும் வெளிவருகிறது. 2019-ல் இதழின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 16 லட்சத்தைத் தாண்டியிருந்தது.!

‘தி எகானமிஸ்ட்' இதழுக்குவேறொரு சிறப்பும் உண்டு. இதன் கட்டுரைகள் அனைத்தும் அதன் ஆசிரியர் குழுவினரால்தான் எழுதப்படும். ஆனால் எழுதிய வரின் பெயர் இராது. ஒவ்வொரு கட்டுரையின் உண்மைத்தன்மையும் பரிசோதிக்கப்படும். ஆய்வு நெறிகளுக்கு உட்பட்டிருக்கும். இதழுக்கான பிரத்யேக மொழி நடைபயின்று வரும்.

வடிவத்தின் தரத்தில் சிறப்புக்கவனம் செலுத்தப்படும். ஒவ்வொரு கட்டுரையின் நடையும், சொல் முறையும் வெவ்வேறு விதமாக இருக்கும். முந்தைய வாரம் உலகம் முழுவதிலும் நடந்த செய்திகள், அடுத்தவார இதழில் விமர்சனப் பார்வையோடு வெளியாகும். இப்படியான ஒரு சர்வதேச இதழில் ஒரு முழுப்பக்கத்தையும் தமிழ்நாடு நிறைத்திருக்கிறது. தமிழ்நாட்டை அங்கே கொண்டு போய் நிறுத்தியிருப்பவர், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அரசும் என்றால், அது மிகையல்ல !

இத்தகைய பெருமைக்குரிய ஒரு, உலகப் புகழ்பெற்ற இதழில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் புகழ்ந்தும் - பாராட்டியும் ஒரு கட்டுரை எழுதப்படுகிறது எனின், அது சிறப்புக்குரிய ஒன்று அல்லவோ ! “South Indian politics - Meet the Dravidian Stalin” எனும் தலைப்பில் அவ்விதழ் தீட்டியுள்ள அக்கட்டுரையின் சில பகுதிகளின் தமிழாக்கம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் தலைவர் வழங்காத செயல்திறனை வழங்கிடும் தமிழ்நாட்டின் தலைவர்’ என்ற தலைப்புடன் ‘தி எகானமிஸ்ட்’ ஆங்கில ஏடு செய்திக் கட்டுரை ஒன்றை (ஜூலை 3 - 2021) வெளியிட்டுள்ளது.

அதன் சில பகுதிகளின் தமிழாக்கம் வருமாறு:- மு.க.ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சி அரசியல் செய்வதை விட, பட்டறிவின் அடிப்படையில், பொருத்தமான முறையில் சிக்கல்களை அணுகுகிறார். தமிழக அரசியலில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கியவர் கலைஞர்!

மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தையான கலைஞர் அவர்கள் தமிழக அரசியலில், மிகப்பெரும் ஜாம்பவான் ஆக விளங்கியவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். தற்போதைய முதலமைச்சர் (ஸ்டாலின்) பிறந்த சில நாட்களிலேயே, சோவியத் தலைவர் இறந்ததாக அறிவிப்பு வெளியானது.

அந்தத் தலைவருக்கு மரியாதை தரும் பொருட்டு அந்த சோவியத் தலைவரின் பெயரையே தமது மகனுக்கு சூட்டினார் கலைஞர். அதுதான் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெருமையாகவும் இருக்கிறது. புதியதாக பொருளாதாரக்குழு ஒன்றை துவக்கி, அதில் வளர்ச்சித் திட்டங்களுக்காக நோபல் பரிசு பெற்ற எஸ்தர்டுப்லோவை ஒரு உறுப்பினராக அமர்த்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம்ராஜன் ஆகிய இருவரும் மற்ற உறுப்பினர்களாகவும் (இவர்கள் இருவருமே பிரதமர் மோடியுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களாவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயணன் மற்றும் நலத்திட்டங்களுக்கான பொருளாதார வல்லுநர் ஜியான் டிரேஸே ஆகிய இருவரும் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் மோடியின் இடையூறு தரும் கொள்கைகளில் மாற்றுக் கருத்து கொண்டவர்களாவர். இந்த ஐவர் கொண்ட குழுக்களை அமைத்த தன் மூலம், பொதுநலன் சார்ந்த பிரதமரின் கருத்துக்களுக்கும், ஸ்டாலின் கருத்துக்களுக்கும் உள்ள வேறுபாட்டை அது வெளிப்படையாக எடுத்துரைக்கிறது.

தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஸ்டாலின் அவர்கள், மேற்குவங்கம் மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களான மம்தா பானர்ஜி மற்றும் பினராயி விஜயன் ஆகியோரைப்போல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார். பாரதீய ஜனதாக் கட்சி (பா.ஜ.க)யின் மோடி அவர்களுக்கு அதிகாரப்பரவலாக்கும் எதிர்க் கட்சிகளின் முகமாக அவர் திகழ்கிறார்.

பலவீனமான காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த உந்துதல் உணர்வும் ஏற்படாத நிலையில், ஏறக்குறைய நிச்சயமாக, அடுத்து வரும் 2024 பொதுத்தேர்தலில், பிரதமரை எதிர்த்து நிற்பது என்பது, மாநிலங்களில் வலிமையாக விளங்கும் தலைவர்களின் ஒரு வகையான கூட்டணியின் மீதே விழுந்துள்ளது.

இளம் தலைவரான மு.க.ஸ்டாலின் வலிமை வாய்ந்த நற்பெயர் பெற்றவராகத் திகழ்கிறார்!

சக்திவாய்ந்த புகழ்பெற்ற தந்தையைப் பெற்றிருந்த ஒரு இளம் தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் வலிமை வாய்ந்த நற்பெயர் பெற்றவராகத் திகழ்கிறார். 1975-77 ஆண்டுகளில் பிரதமராக இருந்த திருமதி. இந்திராகாந்தி ஜனநாயகத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து விட்டு ஸ்டாலின் அவர்கள் உள்பட பெரும்பாலான எதிர்க் கட்சியினரைச் சிறையில் அடைத்தார். சிறையில் மு.க.ஸ்டாலின் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

அவருடன் சிறையில் இருந்த தோழர்களில் ஒருவர் இறந்து விட்டார். தமிழ்நாட்டினுடைய செயல்திறன் மிக்க தலைவராகத் தம்மை நிரூபித்து வருகிறார் மு.க. ஸ்டாலின். அவர் செயல் மனப்பான்மை கொண்ட இயல்புடனதோன்றி தனது அரசியலில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் 1990ஆம் ஆண்டுகளில் மேம்பாடைய தொடங்கியபோது, சென்னையின் வணிக சமுதாயத்துடன் நட்பு செய்து கொண்டார். இறுதியாக கலைஞர், அவரை மாநிலத்தின் தலைநகராம் சென்னை நகரின் மேயராக ஆக்கினார். வெள்ளை அரைக்கைச் சட்டையும் வேட்டியும் அணிந்து கொண்டு, தமக்கென பொதுமக்களிடத்தில் ஓர் ஆக்கபூர்வமான எண்ணப் பதிவை, கருத்துருவை உருவாக்கிடத் தொடங்கினார். எனினும் மிகுந்த மரியாதையுடன் தம் தந்தைக்கு அடங்கியவராகவே இருந்தார்.

2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வின் தலைவர் இறந்தபின்பு பா.ஜ.க.வின் உதவியுடன் அ.தி.மு.க சில ஆண்டுகள் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் அதிகாரத்தில் உயர்ந்த பா.ஜ.க தமிழ் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோடிக்கு வட இந்திய மாநிலங்களில் வெறுப்பு அல்லது வரவேற்பு இருந்தபொழுது தமிழ்நாட்டில் அவருக்கு 2.2 சதவிகித ஆதரவே இருந்தது.

அதுவே அ.தி.மு.க.விற்கு பெரும் தோல்வியைக் கொடுத்தது. மு.க.ஸ்டாலின் அவர்களின் தி.மு.க., அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. “மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு தலைவர், சொற்பொழிவாளர், கொள்கையாளர் எனும் வகைகளில் தனது எல்லைகளை நன் குணர்ந்தவராக, ஒரு சிறந்த ஆட்சியாளர் என வரலாற்றில் இடம்பெற விரும்புகிறவராக அவர் காணப்படுகிறார்.’’-என வரலாற்று அறிஞர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி கூறுகிறார்.

அவர் (மு.க.ஸ்டாலின்), கோவிட்-19 குழுவில், தேர்தலில் தோல்வியுற்ற முந்தைய அரசின் நல்வாழ்வுத்துறை அமைச்சரை இடம்பெறச் செய்ததன் மூலம் அவர் பயன்தரும் செயல் நாட்டமுடையவராகவும் இருக்கிறார் என்பதும் தெரிகிறது. தமிழ் மக்களை நன்றி செலுத்தக்கூடியவர்களாக ஆக்கியுள்ளது!

இந்தப் பெருந்தொற்று, நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடும் அளவில் மிக வலிமையான மக்கள் நலவாழ்வு உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ளமைக்காக தமிழ்மக்களை நன்றி செலுத்தக் கூடியவர்களாக ஆக்கியுள்ளது. இதுநாட்டின் பிற பகுதிகளிலிருந்து இம்மாநிலம் (தமிழ்நாடு) தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்கான ஒரு வழியாகும். இவ்வாறு ‘தி எகானமிஸ்ட்’ தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

Also Read: “அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை” : அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!