India

டெல்டா பிளஸ் வைரஸை கண்டறிய பெரிய அளவிலான சோதனை செய்யாதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவ வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய, மாநில அரசுகள் தாயார் நிலையில் உள்ளன.

தற்போது, உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் ஒருவர் டெல்டா பிளஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டிலும் ஒருவர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில், மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது., இது வேகமாக பரவால் இருக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியவும், தடுக்கவும் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளாதது ஏன்?, டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க தடுப்பூசிகள் எந்த அளவுக்கு உதவும்? இது தொடர்பான முழு விவரம் எப்போது கிடைக்கும்? கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க என்ன திட்டம் உள்ளது?" என பதிவிட்டு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: இயற்பியல், கணிதம் படிக்காதவர்களுக்கு பொறியியல் சீட்? கல்வி தரத்தை குறைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசு?