India

“கொரோனா 2வது அலையால் ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு இந்திய பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படும்” : RBI கணிப்பு!

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஜூன் மாதத்துக்கான தனது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலை, இந்திய வளர்ச்சியின் போக்கு, மற்றும் நாட்டின் நிதிநிலை கட்டமைப்பு ஆகிய தலைப்புகளில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கூறப்பட்டிருப்பதாவது:-

“இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து கொரோனா பாதிப்புடன் போராடி வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடனான நம்பிக்கைக்குத் திரும்பியிருந்தாலும் உள்நாட்டுத் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. அதேசமயம் வேளாண் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சியின் பாதையில் உள்ளன. தற்போது இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிப்பது ஒன்றே தீர்வு.

பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள், தடைகள் அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வரும் திறன் இந்தியப் பொருளாதாரத்துக்கு உள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியா மட்டுமல்லாமல் எல்லா நாடுகளின் அரசுகளையும் அவற்றின் நிதிக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய நிதி கட்டமைப்பை ஊக்குவிக்க அரசு நிதித் தொகுப்பை வெளியிட்டது.

மேலும் நிதி நிலையைச் சரி செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதைவிடவும், எப்படி திட்டமிடப பட்டுள்ளது என்பதை கவனிப்பது அவசியம். மூலதன ஒதுக்கீடு மற்றும் வருவாய் செலவினம் இடையிலான விகிதம் மற்றும் வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களை நாம் வகுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கூட்டாட்சியின் குரல்.. காழ்ப்புணர்ச்சியின்றி ஏற்றுக்கொள்வாரா PM மோடி ?