India

கும்பமேளாவில் 1 லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள்: பா.ஜ.க ஆளும் உத்தரகண்டில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடைந்த போது, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார், டேராடூன், தெக்ரி உள்ளிட்ட பகுதிகளில் ஏப்ரல் மாதம் கும்பமேளா திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று கங்கையில் நீராடியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த கும்பமேளா திருவிழா நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு வழி வகுத்துவிட்டது என எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டினர். எப்படி இவ்வளவு கூட்டத்திற்கு அனுமதி கொடுத்தீர்கள் என பா.ஜ.க ஆளும் உத்தரகண்ட் அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, உத்தரகண்ட் அரசு பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டது. 9 நிறுவனங்கள் மற்றும் 22 ஆய்வுக் கூடங்கள் மூலம் 4 லட்சம் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனம் ஒன்றால் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதாவது, ஒரே ஒரு தொலைப்பேசி எண்ணைக் கொண்டு 50க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஒருவருக்குப் பயன்படுத்தக்கூடிய கொரோனா பரிசோதனை கருவி 700 பேருக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கணக்குக் காட்டி முறைகேடு செய்ததும் அம்பலமாகி உள்ளது.

மேலும், பெயர்கள், முகவரிகள் எல்லாம் கற்பனையாகவே எழுதப்பட்டிருக்கின்றன. எந்த விவரமும் இல்லாமல் கதவு எண் 56 அலிகார் என்றும் கதவு எண் 76 மும்பை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. கதவு எண் 5 ஹரித்துவார் என்ற போலி முகவரியில் மட்டும் 530 பேர் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதேபோல, கான்பூர், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 18 நகரங்களைச் சேர்ந்த பல நபர்களுக்கு ஒரே தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கும்பமேளாவிற்கு வருபவர்களுக்குப் பரிசோதனை செய்வதற்கான நியமிக்கப்பட்ட 200 பேரும் மருத்துவ பணியாளர்கள் அல்ல. மேலும் இவர்கள் கும்பமேளாவிற்கு வராமல் கொரோனா மாதிரிகளை எடுத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் டேட்டா என்டரி ஆப்ரேட்டர்கள். தற்போது ஒரு லட்சம் போலி சோதனைகள் நடந்துள்ளதால் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரகாண்ட் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதற்குப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடைபெற்ற கும்பமேளா காரணம் என்று கூறப்பட்ட நிலையில், கும்பமேளாவில் போலி கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'ஜெய் ஸ்ரீராம்' கூறச் சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது கொலைவெறித் தாக்குதல் : பா.ஜ.க ஆளும் உ.பியில் கொடூரம்!