India

“இந்தியாவில் கடந்த ஓராண்டில் பெற்றோரை இழந்த 30 ஆயிரம் குழந்தைகள்” : NCPCR வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கடந்த ஓராண்டில் இந்தியாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மட்டும் 30 ஆயிரத்து 71 பேர் என குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (National Commission for Protection of Child Rights -NCPCR) தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR), கடந்த 2020 ஏப்ரல் 1 முதல் நடப்பாண்டு ஜூன் 5 வரை 30 ஆயிரத்து 71 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

மேலும், 26,176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 3,621 பேர் அநாதைகளாக மாறியுள்ளனர். 274 குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர் என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் சுமார் 7,084 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். குழந்தைகளைப் பற்றிய எந்தவொரு ரகசிய தகவலும் பொதுகளத்தில் வைக்கப்படக்கூடாது அல்லது எந்தவொரு நபருக்கும், நிறுவனத்திற்கும் வழங்கப்படக்கூடாது என்று ஆணையம் அனைத்து மாநிலங் களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழி காட்டுதல்களையும் முன்வைத்துள்ளது.

குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படத்தில் ஒரு காட்சி.

உலகம் முழுவதும் சூன் 12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) அனுசரிக்கப்படும் நிலையில் இந்தியாவில், பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகையசூழலில், பெற்றோரை குழந்தைகள் இழந்துள்ள நிலையில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: வார்ரூம் முதல் நிதியுதவி வரை.. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த கழக அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம் !