India
“அமைதியாக இருந்து வரும் லட்சத்தீவை ஒன்றிய பா.ஜ.க அரசு சூறையாடத் துடிப்பது ஏன்?” - ‘முரசொலி’ தலையங்கம்!
லட்சத்தீவில் குழப்பம் ஏற்படுத்தத் துடிக்கும் பா.ஜ.க அரசின் திட்டங்களைச் சாடி தலையங்கம் தீட்டியுள்ளது ‘முரசொலி’ நாளேடு. ‘முரசொலி’ நாளேட்டின் இன்றைய தலையங்கம் வருமாறு:
அரபிக்கடலில் கேரளாவிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் இலட்சத் தீவு இருக்கிறது. பெயர்தான் இலட்சத் தீவு. ஆனால் 36 தீவுகள் மட்டுமே இருக்கின்றன. 10 தீவுகளில் மக்கள் வசிக்கிறார்கள். இங்கே ஒரு இலக்கத்திற்கு குறைவானவர்களே வசிக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இங்கே முக்கியமாகப் பேசப்படுகின்ற மொழி மலையாளம். மேலும் இரண்டு ஆதிவாசிகளின் மொழிகளும் பேசப்படுகின்றன. இது யூனியன் பிரதேசமாகும். இவ்வளவு சிறிய ஊருக்கு - சட்டமன்றமோ - துணை நிலை ஆளுநரோ இல்லாத பிரதேசத்திற்கு ஐ.பி.எஸ்.,ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நிர்வாகியாக நியமிப்பார்கள். ஆனால், இலட்சத்தீவுக்கு பிரபுல் கோடா படேல் என்பவரை நிர்வாக அதிகாரியாகக் கடந்த டிச.5, 2020இல் நியமனம் செய்தார்கள்.
பிரபுல் கோடா படேல் குஜராத்காரர். மோடியின் குஜராத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஒன்றிய அமைச்சராகப் பணியாற்றியவர். ஆர்.எஸ்.எஸ்.காரர். இவரை ஏன் இலட்சத்தீவுக்கு நிர்வாக அதிகாரியாக பா.ஜ.க ஒன்றிய அரசு போட்டு இருக்கிறது. அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் அல்லவா? இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழும் தீவு -இலட்சத்தீவு. ஆகவே, படேல் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். பள்ளிகளில் மீன், கறி உணவுகளுக்கு தடை போட்டார். மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கினார். தனக்குச் சாதகமான அரசு அதிகாரிகளை நியமித்துக் கொண்டார். அந்தத் தீவில் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறார். இவரை மாற்ற வேண்டும் எனும் குரல் எல்லா எதிர்க்கட்சிகளிடமிருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் மூலம் படேலை திரும்பப் பெறவேண்டும் எனும் கோரிக்கை மிக வலுவாக எழுந்துள்ளது.
நமது தலைவர் மு.க.ஸ்டாலினும் ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இதுமட்டுமில்லை. கேரள சட்டமன்றம் பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. மேலும் இலட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகம்மது பைசல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருக்கிறார். தீவில் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதி முறைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் படேலையும் மாற்றவேண்டும் என்றும் சந்திப்பின்போது அமித்ஷாவிடம் வற்புறுத்தி இருக்கிறார். இச்செய்தியை முகமது பைசல் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கேரள மாநில மக்கள் ‘இலட்சத்தீவைக் காப்பாற்று’ எனும் முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள். அமைதியாக இருந்து வந்த இலட்சத்தீவில் இப்போது பிரச்சினைகள் எழுவதற்குக் காரணம் என்ன? இது பிரதமர் மோடியின் கவனத்திற்குச் செல்லவில்லையா? ஏன் இந்தப் பிரச்சினையில் மௌனம் சாதிக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.
இலட்சத்தீவில் பெரும்பான்மை அளவில் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வசித்தாலும் ஒற்றுமையோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். தீவில் பெரிதாகக் குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு 8 வழக்குகளும், 2018இல் 6 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 16 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 வழக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போடப்பட்ட வழக்குகள். 2019 ஆம் ஆண்டு போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக 4 வழக்குகள் எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மற்றபடி இலட்சத்தீவில் பெரிதாக எந்தக் குற்றச்செயலும் நடைபெறவில்லை.
பங்காராம் எனும் தீவில் மட்டுமே மது அனுமதிக்கப்பட்டு வந்தது. தீவின் மற்ற பகுதிகளில் அனுமதி இல்லை. இங்கு பிற மாநிலத்தவர் துண்டு நிலத்தைக்கூட விலைக்கு வாங்க முடியாது. அழகான தீவில் மீன்பிடிதொழிலும் மக்களின் அமைதியான வாழ்வும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பிரபுல் கோடா படேல் நான்கு அனுமதிகளை அந்தத் தீவுக்கு விரோதமாக நடைமுறைப்படுத்தினார்.
(1) யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய நிலங்களை வாங்கிக்குடியேறலாம்.
(2) பள்ளிகளில் புலால் உணவு கிடையாது. காய்கறி உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இலட்சத்தீவில் மாட்டுக்கறி முக்கிய உணவு. அதுதான் வணிகமாக நடைபெறும். இதைத் தடுத்து சட்டம் கொண்டு வந்தார் படேல்.
(3) இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட முடியாது. இதுவும் இஸ்லாமியரை குறி வைத்துதான் கொண்டுவரப்பட்டது.
(4) சமூக விரோதத் தடுப்புச் சட்டம் மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்கலாம். குற்றச் செயல்களே மிகக்குறைந்து காணப்படும் இத்தீவில் இந்தச் சட்டம் எதற்காக என்று தெரியவில்லை. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து மாற்றியுள்ளார் மோடியின் நண்பர் பிரபுல் கோடா படேல்! இப்படியெல்லாம் பா.ஜ.க.வினர் இந்தத் தீவை செய்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நன்றாக நமக்குத் தெரிகிறது. இதற்கு முழுமுதற் காரணம் இலட்சத் தீவைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்காகத்தான் செய்கிறார்கள் என்று திடமாக நாம் நம்பலாம்.
ஆனால், இந்தியாவில் இருக்கிற ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இலட்சத்தீவில் உள்ள நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும் பிரபுல் கோடா படேலை மாற்றுவது ஒன்றே தீர்வாகும். ஜனநாயக வழியில் இத்தகைய சர்வாதிகாரத்தை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? இதுகுறித்து 93 உயர் அதிகாரிகள் பிரதமருக்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதி இருக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்புக்குரல் எழுந்தும், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இலட்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? அத்தீவு மக்கள் வேறு போராடத் தொடங்கி விட்டார்களே!.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !