India
“கூட்டாட்சி முறையை தலைகீழாக மாற்றும் ஒன்றிய அரசின் ஆபத்தான ஆட்டம்” : The Wire இதழில் தி.மு.க MP கட்டுரை!
மாநில அரசுகளின் அதிகாரங்களை ஆக்கிரமித்து, கூட்டாட்சி முறையைத் தலைகீழாக மாற்றிடும் வகையில் ஒன்றிய அரசு ஆபத்தான ஆட்டம் ஆடி வருகிறது என்று மாநிலங்களவை தி.மு.க உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் “The Wire” இணையதள ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
அக்கட்டுரை வருமாறு:
ஒன்றிய அரசின் ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள் பெருகி வருகின்றன. ஒன்றிய அரசானது, உண்மை நிலையுடன் தொடர்பில்லாமல் தேவையின்றிக் குறுக்கிடும் ஒரு வெளியாளைப் போன்று பார்க்கப்படுகிறது. சில துறைகளுக்கு முடிவு மேற்கொள்ளும் வசதியான நிலையிலுள்ள மாநிலங்களின் காலை ஒன்றிய அரசு மிதிப்பது அல்லது அடியெடுத்து வைப்பது மிகவும் கவலையளிக்கிறது.
ஆட்சியமைப்பு முறை தன்னிகரற்றது!
நமது அரசமைப்புச் சட்ட வல்லுநர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஆட்சி அமைப்பு முறையானது அதன் இயற்கைப் பண்பிலும் செயற்பாட்டிலும் தன்னிகரற்றதாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் மிக நீளமானதாகும். உலகின் பல்வேறு அரசமைப்பு முறைகளின் சிறப்புகளை ஒன்று திரட்டிட அது முயன்றுள்ளது. அதே நேரத்தில் எந்தவொரு குறிப்பிட்ட முறையிலும் உள்ள தீங்கானப் பகுதிகளைக் களைந்திடவும் முயன்றுள்ளது. இவ்வாறு ஒரு நடுநிலையான பாதையைப் பின்பற்றுவதென முடிவு செய்தது. அறிஞர்கள் பலரும், அரசமைப்புச் சட்டத்தின் உண்மையான செயற்பாடுகளும் இந்த ஆட்சியமைப்பு முறை தன்னிகரில்லாதது எனக் கருதும் வகையில் இதனைக் கூட்டாட்சி அடிப்படையோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தனது இயல்பில்/ தன்மையில் முற்றிலும் ஒற்றையாட்சி முறையோ கூட்டாட்சி முறையோஅல்ல.
அரசமைப்புச் சட்டமே உயர் அதிகாரமுடையது!
ஒரு கூட்டாட்சிக்குரிய அத்தனை சிறப்பியல்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது. அல்லது உயர் அதிகாரமுடையது’-என்பதாகும். ஒரு மாநிலம் தனக்குரிய நிர்வாக அதிகாரங்கள், சட்டமியற்றும் அதிகாரங்கள், சட்ட அதிகாரங்கள், இரட்டை அரசு - ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்திலிருந்தே பெறுகிறது - ஒன்றிய அரசு எனவும்,மாநில அளவில் ஓர் அரசு எனவும் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டபடி அதிகாரப் பகிர்வு- ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றன/ செயற்படுத்துகின்றன.
எனினும் அரசமைப்புச் சட்டத்தின் படி பின்பற்றப்படவேண்டிய சமநிலையை தலைகீழாக மாற்றிடும் வகையில் ஒன்றிய அரசு முயற்சித்துக் கொண்டிருப்பதை அண்மைக் காலமாகக் காணமுடிகிறது.
நீர்த்துப் போகச் செய்யும் கூட்டாட்சி அமைப்பு!
4 ஆம் சட்டத் திருத்தமானது இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பை கொள்கை அளவில் நீர்த்துப் போகச்செய்யும் வகையிலான ஒரு (பிரிவுக்கோடு போன்ற) நிலையாக இருந்தது. இதனால், இதற்கு முன்பு மாநிலங்களின் பட்டியலில் அடங்கியிருந்த அதிகாரங்கள் தற்பொழுது மாற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக -பிரிவு 2A என்பது ஒரு மாநிலத்தில் இராணுவத்தைக் கொண்டு வந்து இறக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளித்தது. இதனை இப்பொழுது மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டதிலிருந்து நாம் காணலாம். அதுபோலவே பிரிவு 19-இன்படி முன்பு மாநிலங்களில் சிறப்பு அதிகாரத்தில் இருந்த காடுகள் பராமரிப்பு ஒத்திசைவுப் பட்டியலுக்கு (பிரிவு 17A) மாற்றப்பட்டது. இதன் விளைவாக ஒன்றிய அரசு காடுகள் தொடர்பான சட்டங்களை இயற்றிடவும் தனது இயற்கை வளங்களின் மீது மாநிலங்களுக்கு இருந்த அதிகாரம் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு நடத்திய தாக்குதல்!
அண்மைக்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒரு வகையில் இந்த அடிப்படை சமநிலையின்மை யென்பது வேதனைக்குரிய வகையில் தெளிவாகவே தெரிகின்றது. தேசிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி, வேளாண் சட்டங்கள், ஒன்றிய அரசின் திட்டங்கள் ஆகிய மாநிலங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அதிகாரங்களுக்குள் புகுந்து ஒன்றிய அரசு நடத்திய தாக்குதலாகும்; அதிகாரச் சூறையாடலாகும். கூட்டாட்சி சம நிலையில் ஏற்பட்ட தலை கீழ்மாற்றம் கோவிட் -19 தடுப்பூசி மாநிலங்களுக்கு வழங்குதலையும் பாதித்தது. அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்கிட இயலாத நிலை பரவலான கண்டனத்துக்கு உள்ளானது. நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட் அவர்கள், “பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம் என பிரிவு1 கூறுகிறது. அரசமைப்புச் சட்டம் அதனைக் கூறும்பொழுது நாம் கூட்டாட்சி விதியைப் பின்பற்றுகிறோம். அப்போது இந்திய அரசு தடுப்பூசிகளை வாங்கி வழங்கிட வேண்டும். தனிப்பட்ட மாநிலங்கள் நிர்க்கதியாகக் கைவிடப்பட்டுள்ளன.
கூட்டாட்சி முறை பலவீனப்படுத்தப்படுவதற்கு சரியான ஓர் அண்மைக்கால எடுத்துக்காட்டு - மேற்குவங்க அரசின் தலைமைச் செயலாளர் ஒன்றிய அரசின் ஆணையின் பேரில் உடனடியாக ஒன்றிய அரசுக்குத் திரும்பி அழைக்கப்பட்டார். வெள்ளப்பாதிப்பு குறித்து பிரதமரின் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் இது நடந்தது.
தேசிய கல்விக்கொள்கை!
இன்னொரு எடுத்துக்காட்டு - தேசிய கல்விக் கொள்கை 2020 இல் குறிப்பிடப்பட்ட மிக அதிகப்படியான அதிகார மையப்படுத்துதல் குறித்து எழுந்த கண்டனங்கள் ஆகும். கொள்கைகளைத் தீர்மானிப்பதில் மாநிலங்களும் ஒன்றிய அரசும் சமநிலையில் இணைந்து நின்று செயலாற்ற வேண்டுவது கூட்டாட்சி முறைப்படியான தேவையாகும். எனினும் ஒருமைப்படுத்தப்பட்ட தேர்வுமுறை என்பது கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துதல் என்பதான தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நீக்கிவிடுகிறது. தனது குடிமக்களின் தேவைகளைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளே மிகவும் சரியான இடத்தில் உள்ளன எனக் கருதப்பட்டதால், தொடக்கத்தில் கல்வியானது மாநில அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. மருத்துவ நுழைவுத் தேர்வினை (NEET) மையப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு எதிர்த்துள்ளது. எதிர்த்து அறைகூவல் விடுத்துள்ளது.
மிகவும் அழிவுகரமானது!
இத்தகைய மையப்படுத்துதலின் விளைவானது மிகவும் அழிவுகரமானது, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த கிராமப்புற மாணவர்களின் நம்பிக்கையை அழிக்கக் கூடியதுமாகும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டத்தில் 98 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்த 17 வயதுடைய தாழ்த்தப்பட்ட மாணவி மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 102ஆம் திருத்தம் 338B, 342A ஆகிய பிரிவுகளை உள்ளே சேர்த்தது. பிரிவு 338B யின்படி ஒரு பிரிவினரை ‘பிற்படுத்தப்பட்ட பிரிவினர்’ என அறிவிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டது. மராட்டிய இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் யார் என்பதைத் தீர்மானிக்க மாநிலங்களுக்கு 102 ஆம் திருத்தத்தின்படி எந்த அதிகாரமும் கிடையாது எனஉச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது.
ஒன்றிய அரசின் தவறான தடுப்பூசிக் கொள்கை!
ஒன்றிய அரசின் தவறான தடுப்பூசிக் கொள்கை மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராகத் திருப்பும். இந்தியா முற்றிலுமாக ஒரு கூட்டாட்சி நாடாக இல்லாவிட்டாலும், தோற்றத்தில் மட்டும் சமமில்லாத கூட்டாட்சியாக இருக்கிறது. இதில் ஒன்றிய அரசிடம் மிக அதிகமான அதிகாரங்கள் குவிந்துள்ளன. அரசியல் நிர்ணய சபை விவாதங்களின்போது பேசிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டமானது “காலத்தின், சூழ்நிலைகளின் தேவைக்கேற்ப கூட்டாட்சியாகவும் ஒற்றையாட்சியாகவும்” இருக்கிறது என்றார். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள் பலவற்றில் ‘செயல்முறை பயன்மிக்கக் கூட்டாட்சி’ என்பது “ஒரு கூட்டாட்சி வடிவம்; அது மெய்ம்மை நிலையையும் சிறந்தவற்றை உணரும் நிலை (அல்லது உணர்ச்சிக்கு ஆட்படும் நிலை) ஆகிய பண்புகளை உள்ளடக்கியதாகும் எனக் கூறியுள்ளது. அரசமைப்புச் சட்டக் குறிக்கோள்களை எய்திடும் வகையில் அனுமதிக்கத்தக்க நடைமுறைக் கொள்கைகள் மீது சார்ந்திருப்பது செயல்முறைப் பயன்மிக்கக் கூட்டாட்சிஆகும்.
புதுமையான தீர்வுகள்!
“செயல்முறைப் பயன்மிக்கக் கூட்டாட்சியானது, மாறிவரும் தேவைகள் சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கேற்ப தொடர்ந்து முறையாக வெளிப்படும் உள்ளமைந்த ஆற்றல் கொண்டது எனக் கூறுவது பயனுடையதாகும். இத்தகைய, இயக்க நிலைத்தன்மையுடைய செயல்முறைப் பயன்மிக்கக் கூட்டாட்சிதான் நம்மைப் போன்ற ஆட்சிஅமைப்பு முறை பின்பற்றத்தக்கதாகும். எந்தவிதமான கூட்டாட்சியிலும் தோன்றக்கூடிய பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகள் கொண்டுவருவதுதான் மேற்கூறிய கோட்பாட்டின் முக்கியமான குறிக்கோளாகும் -” என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நம்முடைய பாதிக் கூட்டாட்சி அமைப்பும், உண்மைக்கு புறம்பில்லாத முழுமையான கூட்டாட்சி வலியுறுத்தப்படுவதும் மாநிலத்திலிருந்து மேலும் மேலும் அதிகாரங்களைப் பறித்துக் கொள்வதற்கு ஒன்றிய அரசை அனுமதிக்கிறது என்று வாதிடப்படக் கூடும் என்றபோதிலும், அத்தகைய நடவடிக்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்வது முக்கியமானதாகும். இத்தகைய அதிகரித்துவரும் ஒன்றிய அரசின் ஆக்கிரமிப்பானது கவலையளிக்கிறது. ஏனெனில் அது மாநில அரசுகளின் சில பகுதிகளில் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு காலூன்றி நிற்கும் நிலையில் அவற்றின் குதிகால்களில் மிதிப்பை போன்ற நிலையை ஏற்படுத்துகிறது. அவை மாநில அரசின் உண்மையான செயல்பாடுகளிலும், அதன் தனித்தன்மையான சமூக, பொருளாதார, மற்றும் கலாச்சாரப் பகுதிகளில் அதிக அளவு அறிவு பெற்றிருப்பதும் அவசியமாகும். ஒன்றிய அரசு அடிக்கடி உண்மையான காட்சிக்கு வெளியில் உள்ள தொடர்பில்லாத வெளி ஆட்களைக் கொண்டு தேவையின்றி தலையிட்டு வருகிறது.
உண்மையான ஆக்கப்பூர்வ கூட்டாட்சியோடு பரிசோதிக்கப்பட வேண்டியது எது அவசியம் என்றால் கூட்டாட்சி சம நிலையைப் பராமரிப்பதற்கான கொள்கையாகும். இந்த யோசனை ஒன்றிய அரசின் அதிகாரம் நாடு முழுவதற்கும் கவலையளிக்கக்கூடிய பொருள்களின் அளவிலேயே கட்டுப்படுத்தப்படவேண்டும். அதே நேரத்தில் மாநிலங்கள் அவர்கள் விரும்பும் வண்ணம் உள்ளூர்நலன்களைக் காப்பதற்கு சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பின் ஐ.டி.சி. லிமிடெட் எதிர் விவசாய உற்பத்திச் சந்தைக்குழு மற்றும் பிறர் வழக்கில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் திட்டத்தின் கீழ், பெருமளவு அதிகாரம் ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் ஒன்றிய அரசுடன் இணைக்கப்பட்டவை என்று பொருள் அல்ல, அவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதிகளில் மாநிலங்களே உயர்ந்தவையாகும். ஒன்றிய அரசு அவர்களுடைய அதிகாரங்களைச் சேதப்படுத்தக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“பரிசோதிக்கப்படாத எப்போதும்அதிகரித்து வரும் ஒன்றிய மயமாக்கும் செயல்கள் குடிமக்களின் நலவாழ்வு குடிகொண்டிருக்கும் கூட்டாட்சி சமநிலையை தலைகீழாகப் புரட்டி விடுகிறது. எனவே, ஒன்றிய அரசுக்கு தற்போதைய தேவை தனது விரிவுப்படுத்தப்படும் அதிகாரங்களைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, கல்வி போன்ற பொருள்களை மாநிலங்களின் கரங்களில் விட்டுவிடவேண்டும். அவர்களே அதைப்பற்றி சிறப்பாக அறிந்துகொண்டு, அதன் வளங்களை எந்தவகையில் ஆற்றுப்படுத்தலாம் என்று அறிந்திருப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் தங்கள் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!