India

“ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை” - தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் ப.சிதம்பரம் சாடல்!

‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. மோடி அரசின் தடுப்பூசி கொள்கையே பற்றாக்குறைக்குக் காரணம் என மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கோவிட் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள்தாம் இந்நிலைக்கு முழுமுதற் காரணம்.

'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என, நாள்தோறும் மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாள்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு இந்த விதிமுறைகள்கூட தெரியாதா?” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!