India
“இந்தியாவின் இந்த நிலைக்கு மோடி அரசின் முறையற்ற செயல்பாடுகளே காரணம்” - சீதாராம் யெச்சூரி கடும் சாடல்!
கோவிட் - 19, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், பி.எஸ்.பி. ஆம் ஆத்மி கட்சிகள் மற்றும் ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீத்தாராம் யெச்சூரியின் பேட்டிவருமாறு:-
கொரோனா முதல் அலையின்போது, நாங்கள் - 21 எதிர்க்கட்சிகள் வீடியோ (மெய்நிகர்) மூலம் ஆலோசனை நடத்தி, அரசுக்கு கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகப் பணப்பரிமாற்றமும், இலவச உணவும் உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.
மத்திய அரசு முறையாக செயல்படவில்லை!
நாங்கள் கூட்டாகவும் தனிப்பட்ட முறையிலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்த போதும் எந்தவொரு கடிதத்திற்கும் மதிப்பளித்து செயல்படவில்லை. அந்த நேரத்தில் மட்டும் மத்திய அரசு உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால், இந்த ஆண்டு அதற்கான விலையை நாம் கொடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்போது மத்திய அரசு முறையாக செயல்படாததன் காரணமாக, இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து நிலவி வருகிறது.
கொரோனா தொற்று கடுமையாக இருக்கும் நேரத்தில் நேரடியாக அவைகள் சந்தித்துப் பேச வாய்ப்பில்லை. தொலைபேசி மூலமோ, காணொலி மூலமோதான் விவாதிக்கப்படும் நிலை உள்ளது. என்னைப் பொறுத்த வரையில் அரசின் நிலை குறித்து கண்காணிக்க அனைத்துக் கட்சிகளும் ஒரே நடைபாதையின் கீழ் வர வேண்டும்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!
கோவிட் பிரச்சினையில் நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே கீழ்நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கடும் நிலையால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கடும் சோதனையான நிலைமையை அரசு சமாளிக்க வேண்டும் என்றால், உடனடியாக பொதுமக்களுக்கு நேரடியாகப் பண பரிவர்த்தனையையும் இலவச உணவையும் வழங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முறையைத்தான் கையாண்டு வருகின்றனர்.
மோடி அரசின் அணுகுமுறை!
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசும் தவறான முறையில் நிர்வாகத்தை நடத்தி வருகின்ற காரணத்தால்தான், இன்றைக்கு கங்கை நதியில் பிணங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் பா.ஜ.க.விற்கு படிப்பினையை ஏற்படுத்தி இருக்கும். அசாம் மாநிலம் தவிர பா.ஜ.க. எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
பா.ஜ.க.விரட்டியடிப்பு!
தமிழகத்தில் ஆகட்டும், கேரளாவில் ஆகட் டும், பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் மக்கள் விரட்டியடித்துள்ளனர். கேரளாவில் பா.ஜ.க. தனது ஒரேயொரு தொகுதியிலும் இம்முறை தோல்வி அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவு வாக்குகளை விட பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகம் பதிவாகி உள்ளன. அனைத்து மாநிலங்களையும் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனுபவத்தின் அடிப்படையிலான ஒருவரின் தலைமையின் கீழ் இந்திய மதச்சார்பற்ற முன்னணி இயங்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோளாகும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!