India

“மிக மோசமாக கொரோனாவை கையாண்டவர்களில் மோடிக்கு முதலிடம்” - அம்பலப்படுத்திய சர்வதேச செய்தி தளம்!

கொரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் அளித்துள்ளது ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச செய்தித் தளமான ‘தி கான்வெர்சேஷன்’.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்போர் எண்ணிக்கை 4,500-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மத்தியில் ஆளும் மோடி அரசு கொரோனா தடுப்புப் பணிகளில் கோட்டைவிட்டதால், இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை பரவலின் தீவிரத்தால் மோடியின் நிர்வாகத் திறமையின்மை பல்லிளித்துவிட்டது. கடந்தாண்டு கொரோனா பரவத் துவங்கியது முதலே அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளைச் சரிவர முன்னெடுக்காததன் பலனை நாடு தற்போது அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச செய்தித் தளமான ‘தி கான்வெர்சேஷன்’ கொரோனாவை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முதலிடத்தில் வைத்துள்ளது.

அந்தக் கட்டுரையில், “ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்பை பதிவு செய்து உலகளாவிய அளவில் தொற்றுநோயின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் இன்றியும், உயிர் காக்கும் மருந்துகள் இன்றியும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

படுக்கை வசதிகள் இல்லாமல் கொரோனா நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர முடியாமல் அவதிப்படுகிறார்கள். நாட்டின் இத்தகைய சோகத்திற்கு இந்தியர்கள் குற்றம்சாட்டும் ஒரு மனிதர் பிரதமர் நரேந்திர மோடி.

2021 ஜனவரியில், பிரதமர் மோடி இந்தியா கொரோனாவை திறம்படக் கையாண்டு மனிதகுலத்தை காப்பாற்றியதாக அறிவித்தார். மார்ச் மாதத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனாவின் எண்ட்கேமை அடைந்துவிட்டதாகப் பெருமையுடன் கூறினார்.

ஆனால், இன்று நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரை பலியாக்கி வருகிறது கொரோன. கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க மோடி அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத விழாவையும் அனுமதித்து மிகப்பெரும் பரவலுக்குக் காரணமானது மோடி அரசு.” எனக் கடுமையாகச் சாடியுள்ளது.

மேலும், ‘தி கான்வெர்சேஷன்’ செய்தித் தளம் ட்விட்டரில் நடத்திய ‘கொரோனாவை மிக மோசமாகக் கையாண்ட பிரதமர்கள் யார்?’ என்ற கருத்துக்கணிப்பில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்திய பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆதரவு கடுமையாகச் சரிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “5 மாவட்டங்களில் ஆய்வு” : தி.மு.க-வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!