India

வேலை, வருமானம் இன்றி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? : உச்சநீதிமன்றம் !

வேலை, வருமானம் இல்லாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? அவர்களின் இக்கட்டான நிலைமையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைவருக்கும் உணவுத் திட்டத்தின் கீழ் எட்டு கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ரேஷன் வழங்க வேண்டும். ஒரு தவணை உதவியாக தலா ரூ.5000 வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சோலிசிடர் ஜெனரல், கடந்த ஆண்டு போல் தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படவில்லை. கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, புலம்பெயர் தொழிலார்கள் பாதிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வேலை, வருமானம் இல்லாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? அவர்களின் இக்கட்டான நிலைமையை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உதவிகளை இந்த ஆண்டும் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, டெல்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சமூக சமையல் கூடங்களைத் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்த வழக்கில் இன்று மாலை விரிவான எழுத்து பூர்வமான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Also Read: “நீட்.. 7 பேர் விடுதலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்”: அமைச்சர் ரகுபதி பேச்சு