India
“புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி: திமுக தலையிட்டு சனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்” : திருமாவளவன் !
சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட நபர்களைத் தேர்தலில் நிறுத்தி 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது திரு.என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராகப் பரவியேற்றிருக்கிறார்.
ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ யாரும் இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு அங்கமாக பாஜகவை சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட.சியென்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு. என்.ரங்கசாமி அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.
புதுவையில் 6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக் கொள்ளவேண்டுமென்றும்; தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்றும் சுட்டிக் காட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!