India
படுக்கை இல்லாமல் 3 மணி நேரம் காத்திருப்பு... காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி... உ.பியில் தொடரும் அவலம்!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் இந்தியா சிக்கிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதிலும் வட மாநிலங்களிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் அச்சத்தை அதிகரித்து வருகிறது.
இன்றைய கொரோனா தினசரி பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 4 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி தினம் தினம் கொரோனா புதிய உச்சத்தை எட்டிவருவது மக்களை பீதியடையச் செய்து வருகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு உரிய முறையில் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் விட்டதால் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரோனா தொற்று எண்ணிக்கை, மறுபுறம் ஆக்சிஜனுக்காக தெருத்தெருவாக அலையும் மக்கள் என இந்தியா கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் சேருவதற்கு படுக்கை இல்லாமல் காரிலேயே காத்திருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவை சேர்ந்தவர் பொறியாளர் ஜக்ரிதி குப்தா. இவரது கணவரும் 2 குழந்தைகளும் மத்திய பிரதேசத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜக்ரிதி குப்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நொய்டாவில் உள்ள அரசு ஜிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால், மருத்துவமனை வளாகத்தில் காரிலேயே 3 மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இதுபற்றி மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள்ளேயே ஜக்ரிதி குப்தா உயிரிழந்துள்ளார்.மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் காரிலேயே பெண் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் தனது மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஏற்பட்ட ஆரம்பகட்ட பிரச்சினைகள் விரைவாகச் சமாளிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால், படுக்கை வசதி கிடைக்காமல் காரிலேயே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பா.ஜ.க அரசின் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!