India

“மருத்துவ உதவிகள் கேட்கும் பொதுமக்களை கைது செய்வதா?” - அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

அனைத்து தடுப்பூசிகளையும் மத்திய அரசே வாங்கி தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஏன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது நீதிபதிகள், தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

குஜராத் மாநிலத்தில் ஏன் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றனர்? 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தால் தான் அனுமதிக்கப்படும் என்று ஏன் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ உதவிக்காக பொதுமக்கள் அலையும்போது, சமூக வலைத்தளங்களில் உதவி கோருவோர் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க நேரிடும் என்று தெரிவித்தனர்.

பின்னர், சமூக வலைத்தளங்களில் மருத்துவ உதவி கேட்கும் பொதுமக்கள் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

தடுப்பூசி தயாரிக்கும் 10 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள போது இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் எந்த அடிப்படையில் மத்திய அரசு 4,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பது புரியவில்லை என்று வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடுப்பூசிக்கான விலையை நிறுவனங்கள் முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Also Read: அதி தீவிரமாக பரவும் கொரோனா: கட்டுப்படுத்தாவிடில் இதுதான் நேரும் - எச்சரிக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன்