India
திறமையற்ற திமிர் பிடித்த பாஜக அரசால் கிராமங்களுக்குள் ஊடுருவிய கொரோனா: மோடியை வரலாறு விடாது!
உலக அளவில் மிகப் புகழ்பெற்ற மதிப்புக்குரிய பத்திரிகைகளில் ஒன்று தி கார்டியன். இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும் இந்த இதழில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட தலையங்கத்தில் இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினைத் தடுக்க இந்திய அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
"இந்தியாவில் கொரோனா தொற்று இந்த வாரம் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ‘இந்தியாவில் கொரோனா முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக’ தெரிவித்தது. ஆனால் இப்போது இந்தியர்களின் வாழ்க்கை நரகத்தில் தவிக்கிறது. புதிய இரட்டை மரபணு கொண்ட பி .1.617 என அழைக்கப்படும், பேரழிவு தரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைப் பரவலாக இந்தியா முழுவதும் வெளிப்பட்டுள்ளது, இந்தியாவின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சவக் கிடங்குகள் நிரம்பியுள்ளன. கொரோனாவால் இறந்த உடல்கள் தெருக்களில் விடப்படுவதால் அவை சிதைந்து அதனாலும் பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 3,32,730 பேருக்கு புதிய கொரோனா நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உலகளவில் அதிக எண்ணிக்கையிலானது. பல நாடுகள் இந்தியாவில் இருந்து விமானங்களைத் தடை செய்துள்ளன, இந்தியாவுக்கு பயணிப்பதைத் தவிர்க்க பரிந்துரைத்துள்ளன.
ஆறு வாரங்களுக்கு முன்னர், இந்தியாவின் மக்கள் தொகையில் 1% மக்களுக்குக் கூட தடுப்பூசி போடாத நரேந்திர மோடி இந்தியாவை, ‘உலகின் ஃபார்மசி’ என்று பெருமிதத்தோடு அழைத்துக்கொண்டார். மேலும் கொரோனா தொற்றுக்கு முந்தைய இயல்பு நிலை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தன் பேச்சுகளில் கருத்துகளை வெளிப்படுத்தினார். வட இந்தியாவில் கும்பமேளா திருவிழாவின் போது பல லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். கும்பமேளாவை முன்னிட்டு லட்சக்கணக்கான இந்துக்கள் கங்கையில் புனித நீராடினார்கள். கும்பமேளாவுக்காக கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இது மாதிரியான பெருந்திரள்களால் கொரோனா வட இந்தியாவில்,‘சூப்பர் ஸ்ப்ரெடிங்’என்ற உச்சப் பரவல் நிலையை அடைந்தது. அமெரிக்காவில் அதிபராக இருந்த டிரம்ப்பை போலவே மோடியும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக பரவும் நிலையிலும் தேர்தல் பிரச்சாரத்தைக் கைவிடவில்லை. ஏப்ரல் மாதத்தில் இந்தியா ஐந்து மாநிலங்களின் தேர்தல்களை சந்தித்தது. அப்போது பிரதமர் மோடி மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் முகக்கவசம் இல்லாமல் கலந்து கொண்டார். இது மாதிரியான காட்சிகள் இந்தியாவை ஒரு விதிவிலக்கான நாடு என்று மோடி முத்திரை குத்தியதை வளர்த்தன.
அதாவது தேசத்தின் மீதான பெருமித அனுமானங்கள், தொற்று நோயை எதிர்கொள்ள தயாராவதை விட அதிகமாகிவிட்டன. மேலும், கொரோனா தடுப்பூசி உற்பத்தி விவகாரத்தில் இந்தியாவை மேற்குலக நாடுகள் ஒரு கடையாணியாக பயன்படுத்திக் கொண்டன. ஆனால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இது ஒரு பிழையாக இருக்கலாம் என்று கூறினார். சீனாவும் அமெரிக்காவும் இப்போது இந்தியாவை விட அதிகமான கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. ஆனாலும் கூட தடுப்பூசிக்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா இன்னும் தளர்த்தவில்லை.
ஆனால், இந்திய பிரதமர் மோடி தனது சொந்த உள்ளுணர்வுகளின் அடிப்படையிலான அதிகபட்ச நம்பிக்கை காரணமாக, சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை ஊதித் தள்ளினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்) நாட்டின் மீதான அக்கறையோடு அரசுக்கு ஆலோசனைகள் அளித்த நிலையில், அவர் மீது மோடியின் அமைச்சரவை சகாக்கள் அரசியல் ரீதியான தாக்குதல் நடத்துகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச்சில்தான் மோடி இந்தியாவின் மீது திடீரென ஊரடங்கு உத்தரவை திணித்தார். முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற நிபுணர்களின் உத்தரவு நிராகரிக்கப்பட்டது. ஆனால் அந்த ஊரடங்கு என்பது மோடியின் நாடகத்தனமான உரைகளுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. கொரோனா முதல் அலையில், கொரோனாவின் தாக்குதல் இந்தியாவின் நகரங்களை அதிகமாகத் தாக்கியது. ஆனால் இப்போது கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களுக்கும் ஊடுருவி விட்டது.
Also Read: “இந்தியா ஸ்தம்பித்து போனதற்கு மோடி அரசின் திறமையின்மையே காரணம்” - வசைப்பாடும் உலக செய்தி ஊடங்கள்!
மற்ற நாடுகளைப்போல இந்தியாவின் மிகப்பெரும் எண்ணிக்கையிலான இறப்பு விகிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் திறமையற்ற திமிர் பிடித்த அரசாங்கத்தின் விளைவால் அந்த நிலை தவிர்க்கப்பட்டது. இந்தியா ஒரு பெரிய, சிக்கலான மற்றும் மாறுபட்ட நாடு. அப்படிப்பட்ட நாட்டை நல்ல நாட்களில் ஆட்சி செய்வதே கடினம். இப்படியிருக்க தேசிய சுகாதார அவசர நிலையில் இந்தியாவை ஆட்சி செய்வது மிகப்பெரிய கடினம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பற்ற தன்மையை மறைக்க இப்போது மாநில நிர்வாகங்களின் தலையில் சுமத்தப் பார்க்கிறார்.
தனது நடவடிக்கைகளால் இந்தியா என்ற நாட்டுக்கு மகத்தான துன்பத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டு, திருத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடுகளை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்து அவர் நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட வேண்டும். இந்தியாவுக்கு ஒற்றுமை தேவைப்படும் இந்த நிலையில், பிரித்துப் பார்க்கும் குறுங்குழுவாத சித்தாந்தத்தை மோடி கைவிட வேண்டும். பேரழிவுகரமான பொதுசுகாதார முடிவுக்கு வழி வகுத்த தனது விதிவிலக்கான கருத்துக்களை நரேந்திர மோடி தொடர்ந்தால் எதிர்கால வரலாற்றாசிரியர்கள் மோடியை சும்மா விட மாட்டார்கள்.
நன்றி - மின்னம்பலம்
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!