India

“குஜராத்தில் படுக்கையும் இல்லை.. ஆக்சிஜனும் இல்லை” - தனி விமானத்தில் சென்னை அழைத்துவரப்பட்ட தொழிலதிபர்!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான குஜராத் மாநில தொழிலதிபருக்கு, அங்குள்ள மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நுங்கம்பாக்கம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பரவிவருகிறது. அங்குள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவழிகின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது.

அப்படியே படுக்கை கிடைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், ஆக்ஸிசன் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் உள்ள வசதிபடைத்தவா்கள் தனி விமானங்களில் வேறு மாநிலங்களுக்கு சென்று, தங்களுக்கு வசதியான மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெறுகின்றனா்.

அதன்படி குஜராத் மாநிலம் சூரத் நகரை சோ்ந்த ஒரு தொழிலதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியில்லாததால், அவரை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சைக்கு சோ்க்க முடிவு செய்தனர்.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான தனியாா் மருத்துவமனையை தொடா்பு கொண்டனா். இந்த மருத்துவமனையும் சிகிச்சையளிக்க தயாராக இருந்தது. இதையடுத்து சூரத்திலிருந்து கொரோனா நோயாளியான தொழிலதிபா், அவருடைய குடும்பத்தினா் 4 பேருடன் தனி விமானம் சூரத்திலிருந்து புறப்பட்டு இன்று பகல் 12 மணிக்கு சென்னை வந்து சோ்ந்தது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் தனியாா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்று சிறப்பு அனுமதி பெற்று, சென்னை பழைய விமானநிலையத்தில் தயாா்நிலையில் நின்றது. தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளி மற்றும் குடும்பத்தினா் 4 பேரை ஏற்றிக்கொண்டு, தனி ஆம்புலன்ஸ் கேட் எண் 6 வழியாக விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தது. பின்பு ஜிஎஸ்டி சாலை வழியாக நுங்கம்பாக்கம் தனியாா் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றது.

அந்த தனி விமானத்தில் வந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான தொழிலதிபர் யார் என்பது குறித்த விபரங்களை விமானநிலைய அதிகாரிகள் அறிவிக்கவில்லை.

Also Read: "அரசு கொடுத்த ஆக்சிஜன் ஒன்றரை மணி நேரத்திற்கே வரும்” - அபயக்குரல் எழுப்பும் டெல்லி மருத்துவமனைகள்!