India
“நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் ஏன்? - உங்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லையா?” : கி.வீரமணி கேள்வி!
நாட்டில் 57 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிபதி பதவிகளுக்கான தகுதி வாய்ந்தவர்கள் இருந்தும், நீதிபதிகளை நியமனம் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றத்திற்கும் - மத்திய அரசுக்கும் சரியான ஒருங்கிணைப்பு இல்லையா? மேலும் காலதாமதம் செய்யாமல் சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளின் நியமனம் நடக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளர்ச்சியே எனது இலக்கு! எனது ஆளுமையில் குறைந்த அரசாங்கம் - நிறைந்த ஆளுமை! எதிலும் வெளிப்படைத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டும்! எல்லோருக்கும் வேலை வாய்ப்பு!எல்லோருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்! குஜராத் மாடல் என்றாலே, வளர்ச்சிதான்!’’ - இப்படியெல்லாம் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கி விட்டு, பதவியை ஒருமுறை அல்ல - இரண்டு முறை பிடித்தவர் பிரதமர் மோடி; அதற்குப் பெரிதும் துணை போன மூலகர்த்தா ஆர்.எஸ்.எஸ்.
உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன!
இந்தக் கொடுந்தொற்றான கரோனாவின் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவத்தினை எதிர்கொள்வதில் மட்டுமல்ல; மற்ற ஆளுமை - ஆட்சி நடத்துவதிலும் பெருந்தோல்வியே கண்டு வருகிறது மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்பது நாளும் வரும் ஒவ்வொரு துறை செய்திகள்மூலம் நாட்டுக்கு நன்கு விளங்கும்படி, ஒப்பனைகளும், ஒய்யார விளம்பரங்களும் நாளும் கலைந்து உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன! ‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்பது அனைவரும் அறிந்த அனுபவ உண்மையாகும்! நம் நாட்டு நீதித் துறையில் வழக்குகளின் தேக்கம் எவ்வளவு தெரியுமா?
57 லட்சம் வழக்குகள் தேக்கம் ஏன்?
57 லட்சம் வழக்குகள் கிடப்பில் - தேங்கிக் கிடக்கும் வேதனையான நிலை. இதற்கு மத்திய அரசு எப்படிப் பொறுப்பு - நீதித் துறைதானே என்று சிலர் அவசரப்பட்டுக் கேட்கக் கூடும். நோய் நாடி நோய் முதல் நாடவேண்டாமா? மூல காரணமே இந்தியா முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 220-க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதனால்தான் - 57 லட்சம் வழக்குகள் தேக்கம்!
உச்சநீதிமன்றம் பரிந்துரைக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டிருக்க முடியுமா?
உச்சநீதிமன்ற ‘கொலிஜியம்‘ - பரிந்துரைக்கும் தலைமை அமைப்புக்கும் - மத்திய சட்டத் துறைக்கும் சரியான புரிதலோ, ஒத்துழைப்போ அல்லது ஒருங்கிணைப்போ அவ்வப்போது வரும் கோப்புகளை ஆய்வு செய்து முடிவு எடுப்பதில் தாமதம் தவிர்க்கப்படுவதோ அல்லது தனி ஒரு குழுவையோ நியமித்து, கலந்தாலோசித்து (Sort out) பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டு இப்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படாத தற்காலிக (Ad hoc) உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்பற்றி உச்சநீதிமன்றம் பரிந்துரைக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டிருக்க முடியுமா? (பிரிவு 224-A அரசமைப்புச் சட்டம்).
எங்கோ ஓர் இடத்தில் போடப்பட்ட முடிச்சு என்ற சிக்கலைத் தீர்க்காததன் விளைவு - இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை அழைத்து தற்காலிக சிம்மாசனத்தில் அமர வைப்பது தேவைப்பட்டிருக்குமா? நாட்டில் உள்ளக் கீழமை நீதிபதிகளிலிருந்தும் (From the Bench), மூத்த வழக்குரைஞர்களிலிருந்தும் (From the Bar) உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடைபெறுவது வழமை. இந்த இரு பிரிவுகளில் தகுதியுள்ளவர்களுக்கா பஞ்சம்? பின் ஏன் இந்த ‘கிடப்புகளும்‘, காலதாமதமும்?
சரியான விளக்கம் மத்திய அரசு தரப்பிலிருந்தும் வெளிவரவில்லை! தங்களுக்கு உகந்தவர்கள் பெயர்கள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்; பரிந்துரைகள் திருப்பி அனுப்பப்பட்டபோது - சரியான விளக்கம் மத்திய அரசு தரப்பிலிருந்தும் வெளிவரவில்லை! ஓய்வு பெற்ற நீதிபதிகளை மீண்டும் நியமிப்பது நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கனவுடன் உள்ள தகுதியுள்ள பலருக்கு வாய்ப்புக் கதவுகள் சாத்தப்படும் கொடுமையல்லவா?
பல பெரிய பொறுப்புகளுக்கு வருபவர்களைக் கண்டுபிடிப்பதிலும், நியமிப்பதிலும் என்ன பெரிய தடை? அதை வெளிப்படையாக மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் ஆட்சியாளர்கள். காரணம், இது மக்களாட்சி. மக்கள் நலனுக்காக - மக்களுக்கு பதில் கூறுவது - விளக்கப்படுத்துவதுதானே விவேகம்? ஏனோ அதைச் செய்யவில்லை! இப்படி தற்காலிக நியமனங்களில் வேண்டியவர் - வேண்டாதார் என்பது போன்ற விமர்சனங்களுக்கும் அது பெரிதும் வழி வகுக்காதா? நீதித்துறையின் நடுநிலைமைக்கும், பெருமைக்கும் இது உகந்ததாகுமா?
உடனே நீதிபதி பதவிகளை நிரப்புக!
எனவே, முதலில் வழக்கு நிலுவை - தீர்வு என்பதைவிட, நீதிபதிகள், சமூகநீதிக் கண்ணோட்டத்தில் நியாயம் வழங்கி, நியமிக்கப்பட்டால், உண்மையான மக்கள் ஆட்சி என்ற பெருமிதம் ஏற்படும். உதாவதினியும் கால தாமதம் - உடனே நீதிபதி பதவிகளை நிரப்புக!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!