India

“இதுவே எனது இறுதி காலை வணக்கமாக இருக்கலாம்” : இறப்பதற்கு முன்பு முகநூலில் பதிவிட்ட மும்பை மருத்துவர்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் தொற்றுப்பரவலின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் பல இடங்களில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது வரையே 80 சதவீதமான படுக்கைகள் நிரம்பிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Also Read: “நிலைமை மிகமோசம்; உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என நினைக்க வேண்டாம்” : மும்பை மருத்துவரின் கண்ணீர் வீடியோ!

இதனால் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்ட பலவும் நோயாளிகளுக்கு கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் உள்ள மோசமான சூழல் குறித்து கண்ணீருடன் மருத்துவர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் மற்றொரு பெண் மருத்துவர் தான் இறப்பதற்கு முன்பு முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த செய்தி பலரையும் பெரும் சோகத்தியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சிவ்ரி பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா ஜாதவ். இவர் அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனையில் காசநோய் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் மனிஷாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படவே, காந்திவலியில் உள்ள அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் மிகவும் மோசமாக பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு ரெம்டெசிவிர் உட்பட பல்வேறு வகையான மருந்தையும் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது அவசர பிரிவில் சிகிச்சையில் இருந்த மருத்துவர் மனிஷா, தனது உடல்நிலை குறித்து முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இது எனது இறுதி காலை வணக்கமாக இருக்கலாம். இந்தத் தளத்தில் இனி உங்களை சந்திக்க முடியாத நிலைமை ஏற்படக்கூடும். கவனமாக இருங்கள். உடல்கள் இறக்கலாம்; ஆனால், ஆன்மாவுக்கு இறப்பு இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்த பதிவை வெளியிட்ட அடுத்த 36 மணி நேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் மனிஷா உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் சக மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்னதாக மருத்துவர் மனிஷா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Also Read: “கைவிடப்பட்ட கொரோனா நோயாளிகளின் உடலை தகனம் செய்யும் இஸ்லாமிய சகோதர்கள்” : மரிக்காத மனிதநேயம்!