India

"மணி அடிப்பதும், கடவுள் புராணம் பாடுவதும்தான் மோடியின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை” - ராகுல் காந்தி விளாசல்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. சமீப சில நாட்களாக தினரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசு தடுப்பூசி திருவிழாவை நடத்தியது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமலும், தேவையான வசதிகள் இல்லாமலும் பல்வேறு மாநிலங்கள் திணறுகின்றன. படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன், தடுப்பூசி இல்லாமல் பல மாநிலங்கள் தவித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா பரிசோதனை இல்லை, ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இ்ல்லை, வெண்டிலேட்டர்கள் இல்லை, ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசி கூட இல்லை. ஆனால் ஒரு பாசாங்குத்தனமான திருவிழா மட்டும் இருக்கிறது.

கொரோனா சூழலை எதிர்கொள்வதற்காக மிகப்பெரிய அளவில் நன்கொடை வசூலித்து சேர்க்கப்பட்ட பி.எம்-கேர்ஸ் நிதி என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் கொரோனா பரவியபோது, பிரதமர் மோடி ஊரடங்கை அமல்படுத்தியதோடு, பொதுமக்களை தீபம் ஏற்றுமாறும், கைகளைத் தட்டி ஓசை எழுப்புமாறும் வலியுறுத்தினார். தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை பரவும் நிலையில், கடந்த முறை பிரதமர் மோடி செய்யச் சொன்னவற்றைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் முதல் நடவடிக்கை, துக்ளக் ஊரடங்கை அமல்படுத்தியது, 2-வது நடவடிக்கை, மணி ஓசை எழுப்பச் செய்தல், மூன்றாவதாக, கடவுள் புராணம் பாடுதல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "மோடி PM தான்... ஆனால் பிரதமர் அல்ல” - மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி விளாசல்!