India

“மக்களுக்கு மேலும் அடியா? - விவசாயிகளை தண்டிக்கும் திட்டத்தை பா.ஜ.க அரசு கைவிட வேண்டும்” : கி.வீரமணி

மத்திய அரசின் உர விலையேற்றம் - விவசாயிகளைத் தண்டிப்பதல்லாமல் வேறு என்ன? உர விலையேற்றத்தினால் பொதுமக்களும் பாதிக்கப்படுவர். மறு ஆய்வுசெய்து விலையேற்றத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:

"மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால், விவசாயத்தின் மீது கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

இதனை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியில் விவசாயிகள் 137 ஆம் நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதினோரு முறை மத்திய அமைச்சர்கள் உள்ளடக்கிய தரப்பானது போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், விவசாயிகளின் தேவையை மத்திய அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. மூன்று சட்டங்களும் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் சீரழிவிற்கு உள்ளாகி விடும்.

இந்த நிலைமையையும் தடுத்திட மூன்று சட்டங்களைத் மத்திய அரசே திரும்பப் பெற வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை (Minimum Support Price) சட்ட உரிமையாக அறிவிக்க வேண்டும், என்பவைகளுக்காக விவசாயிகள் வன்முறையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையைப் புறந்தள்ளி வரும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு - ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப்போல’ பல்வேறு பயிர்களை சாகுபடிக்கு செய்ய விவசாயிகள் பயன்படுத்திவரும் ரசாயன உரங்களின் விலைகளை அபரிமிதமாக உயர்த்தி கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்திலும் நாட்டு நன்மை கருதி ஒட்டுமொத்த விவசாய விளைச்சலை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் உயர்த்திக் காட்டிய விவசாயிகளுக்கு பா.ஜ.க அரசு அளித்துள்ள பரிசுதான் உரங்களின் விலை ஏற்றம் போலும்!

விவசாய உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கத் தெரிந்த அரசாங்கத்திற்கு - விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சிடத் தெரிந்த அரசாங்கத்திற்கு - விவசாயத்தை லாபகரமானதாக ஆக்கிடத் தெரியவில்லை. தெரிந்தும் அதைச் செய்திட முன்வரவில்லை; மாறாக விவசாயிகளின் சாகுபடிச் செலவை மேலும் உயர்த்திடும் வகையில் உரங்களின் விலைகளைக் கடுமையாக (60 விழுக்காடு அளவுக்கு) ஏற்றி அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் இது நியாயந்தானா? கொடுமை அல்லவா?

யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் ஆகியவற்றின் விலை ஏற்றத்திற்கு, உரங்களின் தயாரிப்பிற்குத் தேவைப்படும் கச்சாப் பொருள்களின் விலை உலகச் சந்தையில் அதிகரித்து விட்டதாக காரணம் சொல்லி அரசு தப்பிக்கப் பார்க்கிறது. நாடு முழுவதும் பரவலாக உரங்களின் விலை உயர்வுக்கு விவசாயிகள் காட்டி வரும் எதிர்ப்பைப் பார்த்து தற்காலிகமாக உர விலை ஏற்றத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது!

உலகச் சந்தையில் விலை ஏறுவதற்கு முன்பு வாங்கிய கச்சா பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உரங்களை பழைய விலையிலேயே விற்க முடிவு எடுத்திருப்பதாக அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழைய விலையே தொடர்வது நீண்ட நாள்களுக்கு நடக்காது. பழைய உர மூட்டைகள் முழுவதும் விற்பனை ஆனவுடன் அறிவிக்கப்பட்ட விலை ஏற்றத்துடன் புதிய உர மூட்டைகள் விற்பனை செய்வதைத் தவிர்க்க இயலாது என மத்திய அரசு அறிவிக்கத் தயங்காது. இது ஒரு பதுங்கிப் பாயும் உத்தியே தவிர, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு நன்மை செய்யாது.

உற்பத்தி செய்திட நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை படிப்படியாக மத்திய அரசு குறைத்துக்கொண்டே வந்துள்ளது. உர உற்பத்திக்கு அளிக்கப்படும் மானியத்தின் அளவினை மத்திய அரசு உயர்த்துவதன் மூலம் தான் உரங்களின் உற்பத்திச் செலவு குறைந்து, உரங்களின் விற்பனை விலை கட்டுப்பாட்டிற்குள் இருக்க முடியும். ரசாயன உரங்களின் உற்பத்திக்கான மானியத்தின் அளவை அதிகரிப்பது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு உடனே அறிவிக்கவேண்டும். அறிவித்ததை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இடைக்கால விலை ஏற்றத்தை தடுப்பதனால் நிரந்தரத் தீர்வு ஏற்படாது.

இது விவசாயிகளை மட்டும் பாதிக்காது; உணவுப் பொருள்களும் விலையேறும்; இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். கொரோனா கொடுந்தொற்றின் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் அடி!

உர விலை ஏற்றம் என்பது நாடு தழுவிய அளவில் விவசாயிகளைத் தண்டிக்கக்கூடிய திட்டமே! மத்திய அரசு இதனைக் கைவிடவேண்டும்!

நாட்டின் விவசாயிகளை மேலும் தொல்லைப்படுத்தி, மக்களையும் அல்லலுக்குள்ளாக்கும் இம்முயற்சியைக் கைவிடுவது மிகவும் தேவை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தைக் கலைத்த பா.ஜ.க அரசு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !