India

பாஜக வேட்பாளர் காரில் பயணித்த வாக்குப்பெட்டி : அதிகாரிகள் சஸ்பெண்ட் - தேர்தல் ஆணையத்தின் ’டக்கு’ இதுதானா?

ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான முதற்கட்டத் தேர்தல் சனிக்கிழமையன்று துவங்குகிறது. மேற்கு வங்கத்திலும், அசாமிலும் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தேர்தல் நடைபெற்றுவரும் இரண்டு மாநிலங்களிலும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது வரை அசாமில் 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், அசாமின் கரீம்கஞ்ச் பகுதியில் பா.ஜ.க கும்பல் ஏற்படுத்திய வன்முறைச் சம்பவத்தின் காரணமாக பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே கரீம்கஞ்ச் ரத்னாரி தொகுதிக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்ட சாவடியில் வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்ல போதிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் விதமாக வாக்குப்பதிவு மையத்தின் பொறுப்பு அதிகாரி ஒருவர், பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்குச் சொந்தமான வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் பத்தார்கண்டி தொகுதியில் வாக்கு இயந்திரங்களை ஏற்றிச் செல்வதற்குத் தேர்தல் ஆணையம் சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாகனம் நீண்ட நேரமாகியும் வரவில்லை எனக் கூறப்பட்டுகிறது.

இதனையடுத்து, வாக்கு இயந்திரத்தைக் கொண்டுச் செல்லும் அதிகாரி ஒருவர் வாக்கு இயந்திரத்தை தனியார் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அந்த வாகனம் பத்தார்கண்டி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏவுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பா.ஜ.க எம்.எல்.ஏ வாகனத்தை வழிமறித்த எதிர்க்கட்சித் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் தேர்தல் அதிகாரியின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலிஸார் அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் இ.வி.எம் இயந்திரங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இ.வி.எம் இயந்திரங்களைக் கவனக்குறைவாகக் கையாண்டதற்காக கரீம்கஞ்ச் பொறுப்பு தேர்தல் அதிகாரிகள் 4 பேரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: “எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது”: மே.வங்கத்தில் மோடி அரசு நடத்திய குளறுபடி !