India
“கொரோனா பரவல் இப்படியே தொடர்ந்தால் சுகாதாரத்துறை திணறிவிடும்” - மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு!
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஒரு வருடம் கழித்து மீண்டும் அதே மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாம்,தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த ஆண்டு இல்லாதவகையில் ஒரேநாளில் 354 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதால், ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன. மேலும் டெல்லி, பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு மோசம் என்ற நிலையிலிருந்து ‘மிகவும் மோசம்’ என்ற நிலைக்கு சென்றுள்ளது. நாட்டின் எந்த மாநிலமும், மாவட்டமும், எந்தப் பகுதியும், உண்மையான ஆபத்தை அறியாமல் அலட்சியமாக இருக்கக் கூடாது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளது. எனவே, பரவலைக் கட்டுப்படுத்தி, உயிர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தால், நாட்டின் சுகாதார அமைப்பே திணறிவிடும். எனவே, மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை ஏற்பாடுகளுடன் முழுமையான தயார் நிலையில் இருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?