India

இலங்கைக்கு சாதகமாக வெளிநடப்பு செய்த இந்தியா: ஈழத்தமிழர்க்கு இதைவிட வேறு என்ன துரோகம் செய்திட முடியும்?

இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க உலக சமுதாயம் முன்வந்துள்ளது. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை விவகாரத்துக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் மையக்குழு, வரைவுத் தீர்மானத்தை கடந்த 23 ஆம் நாள் தாக்கல் செய்தது. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையத்தில் 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளன.

ஈழத்தமிழர்க்கு நீதி கிடைக்க முன்வந்த 22 நாடுகளை நாம் பாராட்ட வேண்டும். வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த நாடுகளில் ஒன்று இந்தியா. இதைவிட ஈழத்தமிழர்க்கு துரோகம் செய்ய முடியாது. இலங்கை அரசு நடத்திய பச்சைப் படுகொலைகளை இப்போது கூட கேள்வி கேட்க மாட்டோம் என்று பா.ஜ.க. அரசு நினைக்கிறது என்றால் அதைவிடத் துரோகம் இருக்க முடியாது. இப்படி ஒரு தீர்மானம் வரப்போவது தெரிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிக முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

"இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில், கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்’’ என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியை தி.மு.க. தலைவர் சுட்டிக் காட்டி இருந்தார். "அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனமும், உலகத் தமிழர்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: “வெல்லம் விற்றவரும், டீ விற்றவரும் கூட்டு சேர்ந்து நாட்டை விற்கப்போகிறார்கள்” - விளாசும் பஞ்சாப் விவசாயி!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குச் சென்று வந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் பற்றி விவாதித்ததாக, பத்திரிக்கைச் செய்திகளில் எதுவும் வெளிவரவில்லை. ஈழத்தமிழர்களின் நலன் மீதான ஆழ்ந்த அக்கறையுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கான எந்தவித அறிகுறியும் வெளியே வரவில்லை.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று மிகுந்த பதற்றத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது - இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளரை இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க மத்திய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது"" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார் தி.மு.க. தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஏற்கனவே பிரதமருக்கு கழக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பி, "ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுக! மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டிடுக" என்று கோரிக்கை விடுத்திருந்தார் தி.மு.க. தலைவர்.

"இலங்கையின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது" என்றும் சொல்லி இருந்தார். இந்த நிலையிலும் இலங்கைக்குச் சாதகமாக இந்தியா நடந்துள்ளது. இதனை இலங்கை அரசு ஆதரித்து, இந்தியாவுக்கு நன்றி சொல்லி இருப்பதுதான் மகா கேவலம் ஆகும்! இதே போன்ற சூழல் 2012 ஆம் ஆண்டு வந்தது. இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதனை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 9.3.2012 அன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்கள்.

அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில், "சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க வேண்டும்; அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. இதைத்தான் ஆதரிக்க வேண்டும்’’ என்று கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

"ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக் கூடாது" என்று வலியுறுத்தினார்கள். நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், பிரதமரை நேரில் சந்தித்து கழகத்தின் நிலைப்பாட்டினையும், உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார். "இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்ட போது, என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை.

மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார் கலைஞர் அவர்கள். இதைத் தொடர்ந்து அமெரிக்க தீர்மானத்தை மத்திய காங்கிரஸ் ஆதரித்துவாக்களித்தது. ஆனால் இன்றைய பா.ஜ.க. அரசு வெளிநடப்பு செய்து துரோகம் இழைத்துள்ளது. பா.ஜ.க.வின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவர்களது இயல்பு அதுதான். தமிழினத் துரோகிகள் என்பதை தொடர்ந்து அவர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்!

Also Read: “இந்துக் கோவில்களைத் தனியார்வசம் ஒப்படைக்க தீவிரம் காட்டும் பா.ஜ.க” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு!