India
“படுதோல்வி பதற்றத்தால் எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறையை ஏவும் பா.ஜ.க அரசு” : தீக்கதிர் தலையங்கம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை சகித்துக் கொள்ள முடியாத மத்திய பா.ஜ.க அரசு ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளது.
அ.தி.மு.கவுக்கு எதிரான அலையல்ல, பேரலை எழுந்துள்ளது; இந்த அலையில் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெற முடியாது என்ற நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க எப்படி எதிர்க்கட்சியினரை மிரட்டுமோ அத்தகைய வழியில் வருமான வரித்துறையை தமிழகத்திலும் ஏவி விட்டிருக்கிறது.
மார்ச் 25 வியாழனன்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி வளாகத்திலுள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். அங்கிருந்து புறப்பட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள துவங்கிய சிறிது நேரத்தில், எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய பா.ஜ.க அரசு, மத்திய விசாரணை முகமைகளான சி.பி.ஐ, என்.ஐ.ஏ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக ஏவிவிடுவது புதிய நிகழ்வு அல்ல. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு மீண்டும் இத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்று அனைத்து தரப்பினரும் உறுதி செய்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக ஏதேனும் ஒரு குற்றத் துரும்பு கிடைத்துவிடாதா என்ற இழி நோக்கத்துடன் அமலாக்கத் துறையையும், என்.ஐ.ஏ உள்ளிட்ட விசாரணை முகமைகளையும் பினராயி அரசுக்கு எதிராக ஏவிவிட்டுள்ளது மத்திய பா.ஜ.க அரசு.
இதேபோல பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் மீது குறிவைத்து இத்தகைய அராஜகங்களை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகிறது பா.ஜ.க அரசு.தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது இந்த தேர்தல் களத்தில் அப்பட்டமாக வெளிச்சத்திற்குவந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் தங்களது பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள், அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களை, முதலமைச்சர் முதல், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அடித்த கொள்ளைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
பத்தாண்டு காலமாக நடந்துவரும் அ.தி.மு.க ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். இந்தப் பிரச்சாரத்தின் முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை ஆளாக மேற்கொண்டிருக்கிற தன்னிலை விளக்கப் பிரச்சாரம் எடுபடவில்லை. செல்லுமிடமெல்லாம் மக்கள் ஊழல் அ.தி.மு.கவையும், மதவெறி பா.ஜ.கவையும் வீழ்த்துவது உறுதி என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக வருமான வரித்துறையை ஏவியிருக்கிறார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எதிர்க்கட்சிகள்.
நன்றி : தீக்கதிர்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!