India
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இட ஒதுக்கீடு என்று கேட்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கு...
இட ஒதுக்கீடு இன்னும் எவ்வளவு காலத்திற்கு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விக்குப் புள்ளி விவரங்களுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
"மகாராஷ்டிரா மாநிலத்தில் 2018 இல் மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா ஜாதியினருக்கு வேலைவாய்ப்பில் 12 விழுக்காடும், கல்வியில் 13 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்திரா சஹானி வழக்கு
இந்த வழக்குகளின் முக்கிய சாராம்சம், ‘‘முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி (இந்திரா சஹானி வழக்கு- மண்டல் கமிஷன் வழக்கு) இடஒதுக்கீடு 50 விழுக்காடு தான் இருக்க வேண்டும்; ஆனால் மராத்தா சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் 50விழுக்காடு என்ற அளவுகோல் மீறப்பட்டது’’ என்பதாகும். இதேபோல் தமிழக அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின் தமிழக அரசுக்கு எதிரான வழக்குகள் மீது தனியே விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை (மார்ச் 19) விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.
அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்: ‘‘மண்டல் தீர்ப்பு அடிப்படையிலும், சூழல்கள் அடிப்படையிலும் இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது சரிதான். மத்திய அரசு முற்படுத்தப்பட்ட - பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. இதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பான இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்ற உத்தரவை மீறியதாகும்.’’ இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார்.
நீதிபதிகளின் குறுக்கீடுகள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘50 விழுக்காடு இடஒதுக்கீடு வரம்பு இல்லை என்றால் சமூகங்களிடையேயான சமத்துவம் என்பது எப்படி வரும்? இந்த விவகாரத்தை தன்னிச்சையாகவே நாங்கள் கையாளவும் நேரிடும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்னமும் எத்தனை தலைமுறைகளுக்குத்தான் இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்?’’ என்றனர்.
மேலும், ‘‘நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் எத்தனை நலத்திட்டங்களை அரசுகள் செயல்படுத்தியும் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னமும் முன்னேற்றம் பெறவில்லையா?’’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த முகுல் ரோத்தகி, ‘‘நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். அதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் 50 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடு என குறைந்துவிடாது. இந்த நாட்டில் இன்னமும் பட்டினிச் சாவுகள் இருக்கின்றன. இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பு (இந்த வழக்கில்தான் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது) குப்பைக்குப் போக வேண்டியது என்று சொல்லவில்லை. 30 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறோம்‘’ என்றார்.
அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
நீதிபதிகள் பொதுவாகத் தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் காணப்படாத, குறிப்பிடப்படாத ஒன்று - இட ஒதுக்கீடு இத்தனை விழுக்காட்டுக்குள்தான் இருக்கவேண்டும் என்பது.
சட்டம் என்ன கூறுகிறது?
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கு வழி ஏற்படுத்திடும் வகையில் சமூக நீதிக்கான அரசமைப்புச் சட்டப் பிரிவு 16(4) இன் படி இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது. ‘பிரிவு 16 இல்- என்ன கூறப்பட்டிருந்தாலும், அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்திடும் வகையில், அவர்களுடைய பிரதிநிதித்துவம் போதுமானவையாக இல்லை எனக் கருதிடும் வரையில் அரசு இட ஒதுக்கீட்டிற்கு உகந்த எந்த வகை விதிமுறையினையும் உருவாக்கிக் கொள்ளலாம்.’
16(4) : Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.
மேற்கண்ட அரசமைப்புச் சட்டப் பிரிவில் கூறப்பட்ட adequately (போதுமான அளவில்) எனும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் till it becomes equal (சமமான அளவில் பிரதிநிதித்துவம் பெறும் வரையில்) ஆகும். ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்துகின்ற வகையில், பிரதிநிதித்துவம் பெற்றுள்ள வகுப்பினருக்கு சமமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரதிநிதித்துவம் பெறும் வரையில் இட ஒதுக்கீட்டினை அரசு வழங்கிட வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்ட விதியின் உள்ளார்ந்த பொருளாகும். (இதையேதான் முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்த பொழுது 1970 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சட்டநாதன் குழுவும் விளக்கம் அளித்துள்ளது).
சட்ட நிலை இவ்வளவுத் தெளிவாக இருக்கும்பொழுது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கு மாறான, வேறான போக்கில் நீதிமன்றத்தில் கூறியிருப்பது அசாதாரணமானதும், தவிர்க்கப்படவேண்டியதும்கூட. நீதிபதிகளின் கருத்து, ஒடுக்கப்பட்ட மக்களை அதிர்ச்சிக்கும், பெரும் துயரத்திற்கும் ஆளாக்கக் கூடியதுமாகும்.
அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாதவற்றை நீதிபதிகள் தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் பேசுவது எப்படி சரியாகும்?
இட ஒதுக்கீடு எத்தனை ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது என்பது முக்கியமல்ல. இந்த இட ஒதுக்கீடு இருந்தும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், அவர்களுக்கென்று அளிக்கப்பட்ட விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்றுள்ளனரா என்பதுதான் முக்கியமான கேள்வி, நியாயமாக நீதிபதிகள் இந்தக் கேள்வியைத்தான் எழுப்பியிருக்கவேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு எப்போது வந்தது?
மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த 1950 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை என்பது நீதிபதிகளுக்குத் தெரியாதா?
அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகுதான் - பல்வேறு தடைகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்குப் பிறகுதான் அமலுக்கு வந்தது.
முதற்கட்டமாக வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. கல்வியில் இட ஒதுக்கீடு என்பது அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்துதான் ஆண்டு ஒன்றுக்கு 9 விழுக்காடு என்ற வகையில் மூன்று ஆண்டுகள் கழித்துதான் செயல்பாட்டுக்கு வந்தது என்பதுதான் உண்மை. அதிலும்கூட எல்லாத் துறைகளிலும் அல்ல. விதிவிலக்குகளுடன் தான் செயல்படுத்தப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்க, இன்னும் எவ்வளவு காலத்திற்கு இட ஒதுக்கீடு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்பது ஆச்சரியமானது என்பதைவிட அதிர்ச்சியானது என்பதே உண்மை - உண்மையிலும் உண்மை!
எங்கெங்கும் உயர்ஜாதியினர் ஆதிக்கம்: இதோ புள்ளி விவரங்கள் பேசுகின்றன.
புள்ளிவிவரங்கள் என்ன சொல்லுகின்றன?
மத்திய அரசின் குரூப் A பதவிகளில் 27 துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பூஜ்ஜியம். குரூப் B-யில் 23 துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடம் பூஜ்ஜியம்.
தாராளமாகப் பார்த்தாலும் பார்ப்பனர் உள்பட உயர்ஜாதியினர் விழுக்காடு 15 மட்டுமே. ஆனால், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர்கள் தானே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.
குரூப் A-யில் உயர்ஜாதியினர் - 69.63%
குரூப் B-யில் உயர்ஜாதியினர் 64.59%
மக்கள் தொகையில் 85 விழுக்காடு உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள்
குரூப் A-யில் 30.97%
குரூப் B-யில் 35.4%
வங்கிகளில் பொது மேலாளர்கள்
உயர்ஜாதியினர் (FC) 422 (94%)
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி - வெறும் 28 (6%)
துணைப் பொது மேலாளர்கள்
உயர்ஜாதியினர் (FC) 1108 (91%)
எஸ்.சி., எஸ்டி., ஓபிசி - 107 (9%)
ஆயுள் காப்பீட்டுக் கழகம்
பொதுமேலாளர்கள்
உயர்ஜாதியினர் (FC) 96 (84%)
எஸ்.சி, எஸ்டி., ஓபிசி 19(16%)
துணைப் பொதுமேலாளர்கள்
உயர்ஜாதியினர் (FC) 344 (87%)
எஸ்.சி, எஸ்டி., ஓ..பிசி 52 (13%)
2019 மே 12-19 நாளிட்ட ‘எகனாமிக் டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரங்கள்.
குடியரசுத் தலைவர் அலுவலகங்கள் - செயலகத்தில் இருக்கைகள்
மொத்தம் 49.
பார்ப்பனர்கள் 39
இதர பிற்படுத்தப்பட்டோர் 6
எஸ்.சி., எஸ்டி. 4
துணைக் குடியரசுத் தலைவர் செயலகத்தில் பதவிகள்
மொத்தம் 7.
பார்ப்பனர்கள் 7
மற்றவர்கள் பூஜ்ஜியம்.
கேபினெட் செயலாளர்கள்
மொத்தம் 20.
பார்ப்பனர்கள் 17
இதர பிற்படுத்தப்பட்டோர் 2
எஸ்ஸி., எஸ்டி. 1
பிரதமர் அலுவலகம்
மொத்தம் 35.
பார்ப்பனர்கள் 31
இதர பிற்படுத்தப்பட்டோர் 2
எஸ்.சி., எஸ்டி. 2
மத்திய செயலாளர்கள்
மொத்தம் 26.
பார்ப்பனர்கள் 18
இதர பிற்படுத்தப்பட்டோர் 7
எஸ்.சி., எஸ்டி. 1
இதுபோன்ற நீண்ட பட்டியல் உண்டு.
மத்திய பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்
மொத்தம் 108.
பார்ப்பனர்கள் 100
இதர பிற்படுத்தப்பட்டோர் 5
எஸ்.சி., எஸ்டி., 3
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
மொத்தம் 3600.
பார்ப்பனர்கள் 2750
இதர பிற்படுத்தப்பட்டோர் 350
எஸ்.சி., எஸ்டி. 300
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நீதித்துறையை எடுத்துக்கொள்வோமா?
இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை
மொத்தம் 330
பார்ப்பனர் - உயர்ஜாதியினர் 306
இதர பிற்படுத்தப்பட்டோர் 20
எஸ்.சி., எஸ்டி., 4
உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை
மொத்தம் 26
பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர் 25
இதர பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்
எஸ்.சி., 1
(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனத்திற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்தவை).
உண்மை நிலவரம் இப்படி இருக்க, இன்னும் எத்தனைக் காலத்திற்கு இட ஒதுக்கீடு என்று திறந்த நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்பது நீதிதானா? நியாயம்தானா? என்று கேட்கத் தோன்றுகிறது.
மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியது என்ன?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரான ராம்ஜெத்மலானி - அவர்களை நோக்கி 100 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்பீர்களா? என்று நீதிபதி ஒருவர் வினா எழுப்பியபோது, ‘Why Not?’ என்று பதில் சொன்னதும் உண்டே!
கரியமுண்டா எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தியதையும் இந்த இடத்தில் நினைவூட்டுவது மிகவும் பொருத்தமானது.
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அவர்கள், ‘‘நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடங்கள் மிகவும் குறைவாக உள்ளன. உயர்ஜாதியினர் நிரம்பி வழிவது நல்லதல்ல’’ என்று சொன்னபோது, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கிட்டு,
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று கூறியதுண்டே!
மாநில அரசுக்கே உரிமை!
உண்மை நிலவரம் இப்படி இருக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதியைக் (Justice Social) காப்பாற்றும் பொறுப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கரங்களில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இட ஒதுக்கீட்டின் அளவை - விழுக்காட்டை முடிவு செய்யும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே உண்டு - மாநிலங்களுக்குத்தான் மக்கள் உண்டு - அவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் தெரியும் என்பதையும் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!