India

"வீடும் இல்ல.. மோடியும் தரல” - வீடு கட்டிக் கொடுத்ததாக பொய் விளம்பரம் செய்து மாட்டிக்கொண்ட பா.ஜ.க!

மேற்கு வங்கத்தில் வருகிற 27ம் தேதியிலிருந்து 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, மத கலவரத்தைத் தூண்டிவிடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி என உள்ளிட்ட பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் மேற்கு வங்கத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிப்ரவரி 25ம் தேதி மேற்கு வங்க செய்தித்தாள்களில், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்தில் நரேந்திர மோடியுடன் பெண் ஒருவரின் படமும் இடம்பெற்றது. இந்த விளம்பரத்தில் இடம்பெற்ற பெண் குறித்து ஆங்கில நாளேடு ஒன்று நடத்திய ஆய்வில், அந்தப் பெண்ணுக்கு மத்திய அரசு திட்டத்தின் மூலம் சொந்த வீடு கட்டிக்கொடுக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள பெண், கொல்கத்தாவின் பவ்பஜார் பகுதியைச் சேர்ந்த லட்சுமிதேவி ஆவார். ஏழை கூலித் தொழிலாளியான இவர், அந்தப் புகைப்படம் தன் அனுமதியுடன் எடுக்கப்படவில்லை என்றும், யார் எடுத்தார்கள், எப்போது எடுத்தார்கள் என்று தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பெண்ணுக்குச் சொந்த வீடு இல்லை. இப்போது அவர் வசித்து வரும் சிறிய வீட்டிற்கு ரூபாய் 500 மாத வாடகை செலுத்தி வருகிறார். மேலும், குழந்தைகளை வீட்டுக்குள் படுக்க வைத்துவிட்டு தாம் தெருவில் நடைபாதையில் படுத்து தூங்கும் நிலைமையில் இருப்பதாகவும், தங்களுக்கு மத்திய அரசு வீடுகட்டிக் கொடுக்காமல் பொய் விளம்பரம் செய்துள்ளனர் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, பா.ஜ.கவிற்கு பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசத் தெரியாது, பொய் என்ற குளத்தில் மூழ்கியவர்கள் இவர்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Also Read: தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் சென்ற முஸ்லிம் சிறுவனை தாக்கிய கும்பல்.. பா.ஜ.க ஆளும் உத்தரகாண்டில் கொடூரம்!