India
“டெல்லி மசோதா நாளை நமக்கும் ஆபத்து” : தமிழக உரிமைகளை சட்டங்கள் மூலம் பறிக்க துடிக்கும் மோடி அரசு!
“டெல்லி மசோதா நாளை நமக்கும் ஆபத்து” என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:- டெல்லி மாநில அரசாங்கத்தின் கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் ஒழித்துக் கட்டும் சட்டமசோதாவை மத்திய அரசு திங்களன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது, டெல்லி மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளை துணைநிலை ஆளுநரின் அதிகாரத்திற்குள் கொண்டு வருவதற்கான மோடி அரசின் திட்டமிட்ட நகர்வே.
மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கொண்டு வந்த ‘டெல்லி தேசிய தலைநகர் பிரதேசம் (திருத்த) மசோதா2021’ என்ற பெயரிலான மசோதா, அரசுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே இணக்கமான உறவை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் இந்த மசோதா, துணைநிலை ஆளுநரை மாநிலத்தின் முழு அதிகாரமிக்க ஆட்சியாளராக அடையாளப்படுத்துகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டத்திலும் ‘அரசாங்கம்’ என்று கூறப்படுகிற பதத்தின் பொருள் ‘துணை நிலை ஆளுநர்’ என்றேகொள்ளப்படும் என வரையறுக்கிறது. இது மிகமிக ஆபத்தானது.
மாநில அரசு நிர்வாகத்தின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கவோ, விசாரணை நடத்தவோ, இதற்காக தேவைப்படுகிற கமிட்டிகள்அமைக்கவோ அல்லது புதிய விதிகளை உருவாக்கவோ சட்டமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றும் மசோதா கூறுகிறது.
மாநில அரசு எந்தவொரு நிர்வாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பு, துணை நிலை ஆளுநரிடம் அனுமதி பெற்று, அவரால் ஒரு பொதுவான அல்லது சிறப்பு உத்தரவு கிடைக்கப் பெற்றபின்னரே செய்ய வேண்டும் எனவும் மசோதா கூறுகிறது. சட்டமன்றம் நிறைவேற்ற முனைகிற எந்தவொரு மசோதாவையும் அல்லது எந்தவொரு அதிகாரம் சார்ந்த செயல்பாட்டையும் நிறுத்தி வைப்பதற்கு துணை நிலை ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு என்றும், தேசிய தலைநகரை நேரடியாக ஆள்வதற்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் அனுமதி அளிக்கிறது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பினை தவறாக விளக்கி - அதனடிப்படையில் புதிய பொறுப்புக்கள் உருவாக்கப்படும் என்றும் மசோதா வரையறை செய்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை பெற்றுள்ள இந்த மசோதா, மாநில அரசுகளின் சுயாட்சியை அழித்தொழிக்கிற மத்திய பா.ஜ.க அரசின் குரூரமான நகர்வுகளுக்கு உதாரணமாக வந்துள்ளது.இந்தியாவில் ஜனநாயகத்தின் உயிரை உருவி, வெறும் கூடாக மாற்றுகிற கொடிய பாசிச நடவடிக்கைகளை மோடி அரசு மிகத் தீவிரமாக அமலாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. மாநில ஆளுநர்களை அதற்கு கருவிகளாக பயன்படுத்துகிறது.
குறிப்பாக யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்களை தனது கைக்கூலிகளாகவே வைத்திருக்கிறது. இன்னும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை விரிவுபடுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்தை உயிரற்ற வெறும் கூடாக மாற்ற முயற்சிக்கிறது. டெல்லிக்கான இந்த மசோதா பிறமாநிலங்களுக்கும் நீளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்