India

காற்று மாசுபாட்டில் முதலிடம் : உலகின் மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள் - IQAir அதிர்ச்சி தகவல்!

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ.க்யூ ஏர் (IQAir) என்ற அமைப்பு ‘உலகின் காற்றின் தர அறிக்கை 2020’ என்கிற தலைப்பில் உலகளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு அறிக்கையில், 2019ம் ஆண்டு முதல் 2020 வரை டெல்லியில் காற்றின் தரம் 15% மேம்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால் இந்த உலகளவிலான காற்று தர மாசுபாட்டில் 10வது இடத்தில் டெல்லி உள்ளது.

உலக நாடுகளின் தலைநகரங்களிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி கருதப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியா முதலில் உள்ளது. அதாவது உலகளவில் மாசுபட்ட நகரங்களின் 30 நகரங்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவில் 22 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இதில் டெல்லியை தவிர இந்திய நகரங்களான காசியாபாத், புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர், ராஜஸ்தானின் பிவாரி, ஃபரிதாபாத், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்தக் மற்றும் தருஹேரா, பீகாரின் முசாபர்பூர் ஆகியவை அடக்கம்.

அதேபோல், மாசுபட்ட நகரங்கள் பட்டியலில், “சீனாவின் சின்ஜியாங்கிற்கு அடுத்த இடங்களில் ஒன்பது இந்திய நகரங்கள் உள்ளன. காசியாபாத் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ மற்றும் பிவாரி ஆகிய நகரங்கள் உள்ளன.

மேலும், போக்குவரத்து, மின்சார உற்பத்தி, தொழில், கட்டுமானம், கழிவுகளை எரித்தல் மற்றும் வேளாண் கழிவுகளை எரித்தல் முதலியவை இந்தியாவின் காற்று மாசுபாட்டின் முக்கியக் காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்குவரத்து புகை மாசுபாட்டில் முக்கிய பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்... திருட்டுக் கணக்கை தொடங்கியதா அ.தி.மு.க-பா.ஜ.க?