India

இந்தியாவில் கொரோனா 2.0 தீவிரம்... 33% அதிகரித்த பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகளை மறந்த மோடி அரசு!

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் கொஞ்சம் குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் சமூக இடைவெளிகளை மறந்து வழக்கம்போல் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைப் போலவே தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 2 நாட்களாக 20 ஆயிரத்தை கடந்து வருகிறது. மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா , பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு கடந்த வாரத்தில், கொரோனா தொற்று பாதிப்பு 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இறப்பு விகிதமும் 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக, மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கொரோனாவால் 1,55,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல, மார்ச் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலான காலத்தில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 887 ஆக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய பிப்ரவரி மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக இருந்ததாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 14 நாட்களில் தொற்று எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளதால் அங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாம் அலை வெகுவேகமாகப் பரவுவதாக இந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியபோது, விளக்கேற்றுங்கள், கைதட்டுங்கள் என மத்திய அரசு காலத்தை கடத்தியதுபோல் இல்லாமல், இந்த முறைவிழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: கூட்டணி குழப்பத்திற்கிடையே மக்களை கைவிட்ட பழனிசாமி அரசு... தீவிரமடையும் கொரோனா - இன்று 685 பேர் பாதிப்பு!