India

பெட்ரோல், டீசல், கேஸ் அடுத்து மோடி கை வைக்கப்போவது பால் விலை : கையறு நிலையில் மக்கள்!

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியா கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இது சாமானிய மக்களின் பட்ஜெட்டை தொடர்ச்சியாகப் பதம் பார்த்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்ததால் சாமானிய மக்களின் இயல்பான வாழ்க்கையைப் பெரிதாகப் பாதித்துள்ளது. இவர்கள், தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தவே தற்போது சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை 100ஐ கடந்து சென்று கொண்டிருப்பதால், சரக்கு போக்குவரத்து வாகனத்தின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தால், காய்கறி சமைத்து சாப்பிடுவதே கேள்விக் குறியாகிவிட்டதாக தினக்கூலி வேலை செய்பவர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் அருகே உள்ள 25 கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்துவது என முடிவு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே பால் விலையை மார்ச் 1ம் தேதி முதல் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி எல்லாம் கவலைப்படாத மோடி அரசாங்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அம்பானி, அதானிகளின் பெயர்களை வைத்து கார்ப்ரேட்டுகளுக்கு சேவகம் செய்து வருவதாக அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: முப்போகம் விளையும் டெல்டா மாவட்டங்களை பழிவாங்குவதா?: தஞ்சையில் கருப்பு கொடி ஏற்றி முதல்வருக்கு எதிர்ப்பு!