India

போதைப்பொருள் பதுக்கிய பா.ஜ.க நிர்வாகிகள்.. வீடு புகுந்து குண்டுக்கட்டாக தூக்கிய மேற்கு வங்க போலிஸ்!

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான பாமெலா கோஸ்வாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடச் சென்றார்.

அப்போது, அவரது காரை போலிஸார் சோதனையிட்டனர். இதில், காரில் இருந்து 100 கிராம் போதைப் பொருளை போலிஸார் கைப்பற்றினர். இதையடுத்து போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக, போலிஸார் அவரை கைது செய்தனர். மேலும் அவருடன் காரில் பா.ஜ.க இளைஞரணியைச் சேர்ந்த பிராபிர் குமார் தேவ் என்பவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் புயலைக் கிளப்பியது.

பின்னர், பாமெலா கோஸ்வாமியிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில், "பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ராகேஷ் சிங்கின் ஆட்கள்தான் எனது காரில் போதைப் பொருளை வைத்துள்ளனர்” எனக் கூறினார். இதனால், இந்த வழக்கில் பா.ஜ.க-வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பர்தாமன் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் ராகேஷ் சிங்கை மேற்கு வங்க போலிஸார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். முன்னதாக, ராகேஷ் சிங்கை தேடி அவரின் வீட்டுக்குச் சென்றபோது அவரது இரு மகன்களும் சோதனை செய்வதை தடுத்தனர்.

இதனால் வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தி, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டில் அவரது இரு மகன்களையும் காவல்துறையின் போதைப்பொருள் பிரிவினர் கைது செய்துள்ளனர். ராகேஷ் சிங் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில், போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து பா.ஜ.கவை தேர்ந்தவர்கள் கைதாகி வருவது பா.ஜ.க தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “காரில் கொக்கைன் கொண்டு சென்ற வழக்கில் பா.ஜ.க இளைஞரணி பொதுச் செயலாளர் கைது” : மே.வங்க போலிஸார் அதிரடி !