India

வேளாண் போராட்டம் எதிரொலி : மோடி ஆதரவு பெற்ற அம்பானி, அதானிக்கு விவசாயிகள் வைத்த'செக்'!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிராகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அம்பானி மற்றும் அதானி வகையறாக்களுக்கு உதவுவதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இவர்களின் பொருட்களையும் வாங்குவதை நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அரியானா, பஞ்சாப் விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தி வந்த ஜியோ செல்போன் மற்றும் சிம்கார்டுகளை புறக்கணித்து வேறு நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர். அதன்படி, விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக டிராய் ஆணையத்தில் ஜியோ புகார் அளித்தது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தினால், ஜியோ நிறுவனம் சந்தித்த இழப்புகளை டெலிகாம் ஆபரேட்டர்களின் டிசம்பர் 2020 தரவு சுட்டிக்காட்டியுள்ளது. இதில், கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதம் வரை அரியானா மாநிலத்தில் ஜியோ நிறுவனத்தை, 94.48 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது, டிசம்பர் மாதத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 89.07 லட்சத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.

மேலும், நவம்பர் மாதம் வரை ஏர்டெல் நிறுவனத்தை 49.56 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி இருந்தனர். டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50.79 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதேபோல், கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதம் வரை வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் 80.23 லட்சம் இருந்த பயன்பாட்டாளர் எண்ணிக்கை, தற்போது, 80.42 லட்சத்திற்கு அதிகரித்துள்ளது.

இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஜியோ நவம்பரில் 1.40 கோடி பயனாளர்களைக் கொண்டிருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் 1.24 கோடியாகக் குறைந்துள்ளது. அதேபோல், நவம்பர் மாதம் வரை பஞ்சாப் மாநிலத்தில் ஏர்டெல் நிறுவனம், 1.05 கோடி பயனாளர்களைக் கொண்டிருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் பயனாளர் எண்ணிக்கை 1.06 கோடிக்கு அதிகரித்துள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் வோடபோன்- ஐடியா நிறுவனம் டிசம்பர் மாதத்தில் 87.11 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும், விவசாயிகள் போராட்டத்தின் மூலம் அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது. பி.எஸ்.என்.எல் டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய 2 மாநிலங்களிலும் சந்தாதாரர்களை அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “பள்ளி வினாத்தாளில் டிராக்டர் பேரணி வன்முறை குறித்து சர்ச்சை கேள்வி” : இசைக்கலைஞர் T.M.கிருஷ்ணா கண்டனம்!