India
உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : பா.ஜ.க ஆளும் உ.பியில் நடந்த கொடூரம்!
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை குற்றம் அதிகம் நிகழும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துக் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்திற்கு போலிஸாரும் உறுதுணையாக இருந்ததையடுத்து, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.
மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்காமல் யோகி ஆதித்யநாத் அரசு வேடிக்கை பார்த்து வருவதாக பல்வேறு சமூக அமைப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உன்னாவ் பகுதியில் மீண்டும் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் மாட்டுக்குத் தீவனம் வாங்க புதன்கிழமை மதியம் கடைவீதிக்குச் சென்றுள்ளனர். ஆனால் மாலைநேரம் ஆகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது, சிறுமிகள் மூன்று பேரும் தங்களது சொந்த வயலில் துப்பட்டாவால் ஒன்றாக வாயில் கட்டப்பட்ட நிலையில், கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த மூன்று சிறுமிகளில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள கான்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான நடக்கும் வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கையை ஆளும் யோகி அரசு எடுக்கத் தவறியதன் விளைவாக உன்னாவில் மீண்டும் இதுபோல கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?