India

பிரச்சார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி!

குஜராத் மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் விஜய் ரூபானி நேற்று வதோதரா நகரில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கினார். உடனே அவரை பாதுகாவலர்கள் தாங்கிப் பிடித்தனர். பின்னர், உடனடியாக முதல்வர் விஜய் ரூபானிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவரின் உடல் நிலை இயல்பாக இருப்பதாகவும், கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் ரூபானிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு இன்று வெளியானது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: #GoBackModi என பதிவிட்ட நடிகை ஓவியா மீது சென்னையில் பா.ஜ.கவினர் புகார்!