India

“ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால், அ.தி.மு.க அரசு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - தயாநிதிமாறன் விளாசல்!

ஊழலுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க அரசு தமிழகத்தில் ஊழலில் திளைக்கும் தனது கூட்டணி கட்சி மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுப்பதில்லை என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி., தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்றுவருகிறது. மக்களவையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பா.ஜ.க அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய மத்திய சென்னை தி.மு.க எம்.பி., தயாநிதிமாறன், “பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, 130 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் அந்த வழக்கை சி.பி.ஐ முடித்துக் கொண்டது ஏன்?

தமிழக வரலாற்றிலேயே தலைமைச் செயலகத்தில் சி.பி.ஐ சோதனை நடத்தப்பட்டது இந்த ஆட்சியில் தான். முதலமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள் என்று வரிசைகட்டி நிற்கின்றன. ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கொரோனா தொற்று காலகட்டத்தில் முகக் கவசம் வாங்கியதில் ஊழல் நடத்திய ஒரே அரசு தற்போதைய தமிழக அரசுதான். ஏன் பா.ஜ.க அரசு இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, இவற்றுக்கெல்லாம் மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள். விரைவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் போகிறார் எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட தோடு சரி. எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இருப்பதையும் தயாநிதி மாறன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி சேவை வழங்கிய மத்திய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், எல்.ஐ.சி, ஏர் இந்தியா தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய தயாநிதி மாறன், கொரோனா காலத்தில் ஏர் இந்தியாதான் மக்களுக்கு உதவியது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

Also Read: “தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!