India

விவசாயிகளின் நாடு தழுவிய ‘சக்கா ஜாம்’ போராட்டம்: டெல்லியில் துணை இராணுவப் படைகள் குவிப்பு!

டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் சக்கா ஜாமை முன்னிட்டு தலைநகரில் 50,000 பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய இடங்களில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். எனினும் டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தப் போராட்டம் நடைபெறாது என்றும், அங்கு விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் விவசாய அமைப்புகள் கூறியுள்ளன.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது பாரதிய கிசான் யூனியன்.

போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ்கள், பள்ளி வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கூறியுள்ள விவசாயிகள், இறுதியில் ஒரு நிமிடம் தொடர்ந்து வாகனங்களின் ஒலி எழுப்பப்படும் என்றனர். இதனிடையே, டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

எல்லைகளில் உள்ள சாலைகளில் பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு முள்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. சாலையின் நடுவே உயரமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி இந்த சாலை மறியலுக்கு, தமது முழு ஆதரவையும் வழங்கி இருக்கிறது. "காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் விவசாயிகளோடு விவசாயிகளாக தோள் கொடுத்து நிற்க வேண்டும்" என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடைய பாரதிய கிசான் சங்கம், 'சக்கா ஜாம்'-ஐ ஆதரிக்கமாட்டோம் எனக் கூறியிருந்தது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில், டெல்லி காவல் துறையினர், துணை இராணுவப் படையினர் என மொத்தம் சுமார் 50,000 பேர் பாதுகாப்பு கருதி களமிறக்கப்பட்டு உள்ளனர். மேலும், டெல்லியிலுள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் நுழைய அனுமதி மறுக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்டி ஹவுஸ், ஐடிஓ, டெல்லி கேட் போன்ற டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் சக்கா ஜாமை முன்னிட்டு மூடப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெல்லியின் பல பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.