India
“கொரோனாவால் பாதிக்கப்பட்ட திடக்கழிவு பணியாளர்களின் பட்டியல் எங்களிடம் இல்லை” - மத்திய அரசு அலட்சிய பதில்!
திராவிட முன்னேற்றக் கழக பொருளாளரும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி. ஆர்.பாலு நேற்று (05 பிப்ரவரி 2021) மக்களவையில், உயிரி - மருத்துவக் கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு, கொரோனாவை எதிர்கொள்ள, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டனவா? என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபேவிடம், உயிரி - மருத்துவக் கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு, கொரோனாவை எதிர்கொள்ள தேவையான, உரிய பாதுகாப்பு உபகரணங்கள், வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப, வழங்கப்பட்டனவா? என்றும், கொரோனாவால் எத்தனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்றும், அவர்களுக்கு தடுப்பூசியை அளிக்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்றும், விரிவான கேள்வியை, மக்களவையில் எழுப்பினார்.
இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் இணையமைச்சர், மக்களவையில் அளித்த பதில் பின்வருமாறு:-
மத்திய மாசுக் கட்டுபாட்டு ஆணையத்தின், உயிரி -மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி, கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கடமையாகும். இதற்கான கொரோனா கால வழிமுறைகள், ஏற்கனவே மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தனி நபர் பாதுகாப்பு உடைகள், மூன்றடுக்கு முகக் கவசங்கள், தரமுள்ள கையுறைகள், காலணி உறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை, கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களே வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
டெல்லியிலுள்ள சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா மற்றும் லேடி ஹார்டிங் ஆகிய மத்திய அரசு மருத்துவமனைகளில், கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப, உரிய, போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும்; பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள், மாநிலப் பட்டியலில் இருப்பதால், கொரோனாவால் எத்தனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் மத்திய அரசிடம் இல்லை என்றும்; கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தடுப்பூசி அளிக்க, தேசிய தடுப்பூசி நிர்வாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!