India

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய கங்கனா ரனாவத் ட்வீட்கள் நீக்கம் - ட்விட்டர் நடவடிக்கை!  

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு இதுவரையில் தீர்வு காணாத மோடி அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதற்காக பல வழிகளையும் கையாண்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்களை விவசாயிகளுக்கு எதிராக களமிறக்கி அவர்களுக்கு எதிராக கருத்துக் கூற வைத்துள்ளது. அந்த வகையில போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும் இடைத்தரகர்கள் என்றும் தேசிய விரோதிகள் என்றும் முத்திரை குத்தும் நோக்கில் திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

இதற்கு முன் கங்கனா ரனாவத் மோடி அரசின் பல திட்டங்களை ஆதரித்து கருத்து தெரிவித்து வந்தார். தற்போது விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருகிறார். அப்படியாக விவசாயிகளுக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். அந்த கருத்துகளை, வெறுப்பு பிரச்சாரம் எனக் குறிப்பிட்டு ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

இந்நிலையில் “ட்விட்டர் விதிகளை மீறும் வகையிலான ட்வீட்களின் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் ” எனக் குறிப்பிட்டு கங்கனா பதிவிட்ட இரு ட்வீட்களை ட்விட்டர் தளம் நீக்கி உள்ளது.

ட்விட்டர் நிர்வாகம் மோடி அரசுக்கு ஆதரவாக சில நேரங்களில் செயல்பட்டு வந்தது. ட்விட்டர் நிர்வாகம் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த பலரது கணக்குகளை முடக்கி இருந்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனமே இன்று தங்களது நிறுவன விதிமுறைகளுக்கு எதிராக கங்கனா ரனாவத் ட்வீட் இருக்கிறது என்று பதிவுகளை நீக்கியுள்ளது.

இதுபோன்று பா.ஜ.க-வை சேர்ந்த பலரது ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் நிர்வாகம் முடங்கியுள்ளது. தொடர்ந்து அவதூறு கருத்துகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையும் விதைக்கும் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.