India

“ஓ.பி.சி கிரீமி லேயர் வரம்பை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது” - டி.ஆர்.பாலு கேள்விக்கு அரசு பதில்!

“பிற்படுத்தப்பட்டோருக்கு (கிரீமி லேயர்) வருமான வரம்பை உயர்த்துவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது” என டி.ஆர்.பாலு எம்.பி-யின் கேள்விக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி பெறவும், அரசு வேலைவாய்ப்புகளை பெறவும், ஓ.பி.சி என்னும் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு சலுகை பெறுவதற்கான ‘கிரீமி லேயர்’ ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. இதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்து வருகிறது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழக பொருளாளரும், தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் நேற்று (பிப்ரவரி 2) மக்களவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான (கிரீமி லேயர்) ஆண்டிற்கு எட்டு இலட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பை உயர்த்தி நிர்ணயம் செய்ய திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் கிருசன் பால் குர்ஜர் அவர்களிடம் பிற்படுத்தப்பட்டோருக்கான (கிரீமி லேயர்) வருமான வரம்பை உயர்த்துவது எப்போது நடைமுறைக்கு வரும்? என்றும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2015ம் ஆண்டிலேயே வருமான வரம்பு 15 இலட்சமாக உயர்த்த பரிந்துரைத்ததா? என்றும், தனிநபர் வருமானம், மொத்த உற்பத்தி பெருக்கம், பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதார செலவுகள் ஆகிய பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, பிற்பட்டுத்தப்பட்டோருக்கான (கிரீமி லேயர்) வரம்பை 25 இலட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.

டி.ஆர்.பாலு எம்.பி., அவர்களின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் கிருசன் பால் குர்ஜர் அளித்த பதிலில், “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கலந்தாலோசனைக்கு பின்னர், பிற்படுத்தப்பட்டோர் (கிரீமி லேயர்) வருமான வரம்பை உயர்த்தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்" - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!