India

“ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் ஏதுமற்ற கானல் நீர் பட்ஜெட்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் - தாகத்தால் தவிக்கும் பசுவுக்குக் கானல் நீரைக் காட்டுவது போல, தமிழக மக்களுக்கு, சட்டமன்றத் தேர்தலையொட்டி, மத்திய அரசு ஒரு மாய லாலிபாப்பை கொடுத்து ஏமாற்றி இருக்கிறது” என மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆறு ஆண்டுகாலம் தமிழகத்தைப் பல வழிகளிலும் புறக்கணித்த மத்திய அரசு, தற்போது சட்டமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு, ஏதோ மெகா திட்டங்களை நிறைவேற்றப் போவதாகப் போக்கு காட்டி அறிவித்திருந்தாலும் - நிதி நிலை அறிக்கையின் அறிவிப்புகளில் தெளிவு இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.

“தமிழ்நாட்டில் 1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டர் சாலைகள்” என்று கூறப்பட்டிருந்தாலும் - நிதி ஒதுக்கப்பட்டு விடவில்லை. “இப்படியொரு திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது” (are also being planned) என்று மட்டுமே நிதி நிலை அறிக்கையின் 10-ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 63,426 கோடி ரூபாய். இத்திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் 21.11.2020 அன்றே வந்து அடிக்கல் நாட்டி விட்டுச் சென்றுவிட்டார். ஆனால், “மத்திய அரசும் - மாநில அரசும் 50:50 சதவீத பங்களிப்பு” என்ற அளவில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் 19.1.2021 அன்று பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் திரு. பழனிசாமி “50:50” சதவீத நிதி பங்களிப்பு அடிப்படையில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக எதுவும் தெரியாத நிலையில் - இந்த நிதி நிலை அறிக்கையில் அந்த 63,426 ஆயிரம் கோடியில் மத்திய அரசின் பங்கு “வகுத்தளிக்கப்படும் (Will be provided)” என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே “தமிழகத்திற்கு மெகா திட்டங்கள்” என்ற இரு திட்டங்களுமே இந்த அளவில்தான் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இது தவிர முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்த நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கோ, நிவர், புரெவி, கனமழை பாதிப்பு உள்ளிட்டவற்றிற்கான நிதியோ எதுவுமே இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படவில்லை என்பது, பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கான மக்களுக்கு, குறிப்பாகத் தமிழக விவசாயப் பெருமக்களுக்கு, மிகவும் ஏமாற்றத்தைத் தருவதாகும். மக்கள் விரும்பாத- விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கின்ற - “சென்னை - சேலம்” பசுமை வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்திருப்பது, தேர்தல் ஆண்டில் கூட - தமிழக விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராகவே நடப்போம் என்ற மத்திய பா.ஜ.க அரசின் பிடிவாதமான, முதலாளிகளுக்குச் சாதகமான, மனநிலையைப் பிரதிபலிக்கிறது; இது பழனிசாமிக்கு மட்டும் வேண்டுமானால் பரவசத்தைத் தரலாம். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைப்பது குறித்தோ, கேஸ் விலையைக் குறைப்பது குறித்தோ, இந்த நிதி நிலை அறிக்கையில் ஏதும் இல்லை. மாறாக, வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக பெட்ரோல், டீசலுக்கு புதிதாக செஸ் வரி விதிக்கப்பட்டிருப்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனாவால் இழந்த வேலை வாய்ப்பை அதிகரிக்க - வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு, மீள முடியாமல் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும், கோடிக் கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பண உதவி வழங்குவது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. இந்திக்கு மொழிபெயர்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு - அதை இன்னும் எப்படியெல்லாம் இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், மாநில மொழிகள் - குறிப்பாக அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அசாமிலும், மேற்கு வங்கத்திலும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே மத்திய அரசின் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 1,000 கோடி ரூபாய் நிதியில், தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். ஓய்வூதியத்தையும், வட்டி வருமானத்தையும் நம்பியிருக்கும் 75 வயதுள்ள மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று கூறி விட்டு - அடுத்த வரியிலேயே அவர்களுக்குப் பணம் செலுத்தும் வங்கியே தேவைப்பட்ட வரியைப் பிடித்து விடும் என்று கூறியிருப்பது வெறும் கண்துடைப்பு!

கொரோனாவிற்கு முன்னும் - பின்னும் மத்திய பா.ஜ.க. அரசு மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் - மாநிலங்களில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை மேலும் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த பட்ஜெட், சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு “மாய லாலிபாப்” கொடுத்திருக்கிறதே தவிர - அந்த “லாலிபாப்” உண்மையானது அல்ல, கைவரக் கூடியதல்ல என்பதை நிதி நிலை அறிக்கையின் வாசகங்கள் நிரூபிக்கின்றன!

எனவே, விவசாயிகள், வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்கள், தொழிலாளர்கள், ஏழை - எளிய நடுத்தர மக்கள் அனைவருக்கும் பயனில்லாத, ஒரு சில பகட்டு அறிவிப்புகளைக் கொண்ட பட்ஜெட் இது. மக்களின் நம்பிக்கையாக இதுவரை இருந்து வரும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கியே தீருவோம் என்ற இந்த நிதி நிலை அறிக்கை - தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் - தாகத்தால் தவிக்கும் பசுவுக்குக் கானல் நீரைக் காட்டும் பட்ஜெட்!

“இயற்றலும் ஈட்டலும்...” எனத் தொடங்கும் திருக்குறளைச் சொன்ன மத்திய நிதி அமைச்சர்; நல வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலை உணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே, ஓர் அரசுக்குப் புகழ் ஒளி சேர்ப்பதாகும் - என்ற பொருள்படும், “கொடையளி செங்கோல்...” எனத் தொடங்கும் குறள் பாவினை கருத்தில் கொள்ளத் தவறியது வருந்தத் தக்கதாகும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “பொதுமக்களின் கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றித் தருவான் இந்த ஸ்டாலின்” - தி.மு.க தலைவர் உறுதி!