India
"அறிவிக்கப்போகும் பட்ஜெட்டில் இந்திய பொருளாதாரம் மீண்டு வருவது கடினம்தான்" - பொருளாதார நிபுணர்கள் கவலை!
2021 - 2022ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. பா.ஜ.க அரசின் பட்ஜெட் அறிக்கைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானவை எனக் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டாவது மக்கள் நலனுக்கானதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினரும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கவேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மத்திய பட்ஜெட் அறிவிப்பில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் சீனிவாசன் கூறுகையில், “100 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட டிப்ரஷன் என்று சொல்லக்கூடிய பொருளாதார வீழ்ச்சியை தற்போது உலகம் கண்டு வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்பு என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உண்ணுவதற்கு மீன் கொடுப்பதை விட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது பரவலான கூற்று. கொரோனா தொற்றின் காரணமாக உலக பொருளாதார நிலையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும் இந்த தருணத்தில், உண்ண மீன் கொடுப்பதுதான் தற்போதைய தேவையாக இருக்கிறது.
பொருளாதார வீழ்ச்சியால் வாங்கும் திறன் குறைந்துள்ளது. கடுமையான விலை ஏற்றம் ஏற்பட்டிருப்பதால் நுகர்வோர் வாங்கும் திறனை அதிகரித்தால் மட்டுமே பொருளாதாரத்தை இழப்பில் இருந்து மீள முடியும்.
ஆண்டு வருமானம் 5 லட்சம் உள்ளவர்களுக்கு வரி இல்லை என்று அறிவித்து, ஏழு லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி சலுகை அறிவிக்கலாம்” என்று சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து பேட்டியளித்துள்ள பொருளாதார நிபுணர் முனைவர் ஜோதி சிவஞானம், “கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்திருக்கிறார்கள். வருமானம் இழந்திருக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள், முக்கியமாக 40% குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
ஏற்றுமதி இறக்குமதி வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மோடி தலைமையிலான அரசு 2014ல் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை பெட்ரோல் விலையை 150% உயர்த்தி டீசல் விலையை ஆயிரம் சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. கட்டுமான தொழில் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வருவாய் குறைந்துள்ள தருணத்தில் பட்ஜெட் அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அறிவிக்கப் போகும் பட்ஜெட்டில் இந்திய பொருளாதாரம் மீண்டு வருவது சற்று கடினம்தான்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!