India
“இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும்” - உறுதியளித்த மத்திய அமைச்சர்!
திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருப்பெரும்புதுhர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு திமுக தலைவர் அறிவுறுத்தலின்படி, இலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணங்களை கலைத்துவிட, இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதை எதிர்த்து, தமிழக மக்களின் கண்டனத்தை தெரிவித்து, மாண்புமிகு இந்திய பிரதமர் திரு, நரேந்திர மோடி அவர்களின் கவனத்தை ஈர்த்து, கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று கடிதம் எழுதியிருந்தார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், இலங்கை அரசு செய்து கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, பதின்மூன்றாவது சட்டத்திருத்திற்கு எதிராக, இலங்கை அரசு, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களை கலைக்க முடிவு செய்திருப்பது, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஆணவத்தையும் மற்றும் அலட்சியத்தையும் காட்டும், துரதிர்ஷ்டமான முடிவாகும் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையில் பதவியேற்றது முதலாகவே, ஈழத்தமிழர்களின் எஞ்சியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையிலும், தமிழர்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதிலும், பிஜேபி தலைமையிலான இந்திய அரசு, இதற்கான தீர்வினைப்பற்றி எந்த முடிவையும் எடுக்காதது ஏன் என்று டி. ஆர். பாலு அவரது கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
டி. ஆர். பாலுவின் கடிதத்திற்கு கடந்த ஜனவரி 21ம் தேதி அன்று விரிவான பதிலை எழுதியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-
“ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்கான அம்மக்களின் எதிர்பார்ப்புகளை பாதுகாக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இலங்கை அரசை தொடர்ந்து, இந்திய அரசு வலியுறுத்தி வருகின்றது.
இலங்கை அரசால் உறுதியளிக்கப்பட்ட, பதின்மூன்றாவது சட்டத்திருத்ததின்படி, அதிகாரப் பரவலை உறுதி செய்வதும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும், இலங்கை அரசின் நலன்களை பாதுகாக்க உதவும் என, எனது சமீபத்திய இலங்கை பயணத்தின் போது, இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டேன்.’’
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமென்று, திருப்பெரும்புதுhர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்களுக்கு எழுதிய பதில் கடிதத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!