India

காசிப்பூர் எல்லையில் தொடரும் பதற்றம் : “ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்” - போராடும் விவசாயிகள் திட்டவட்டம்!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 64வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சாரச் சட்டம் ஆகியவற்றை ரத்துசெய்ய வேண்டும் என்ற ஒற்றைக்கோரி க்கையுடன் நாட்டையே உலுக்கியுள்ள இந்தப் போராட்டங்களில் ஒன்றான ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று தில்லியை முற்றுகையிட்டு டிராக்டர் அணிவகுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, பேரெழுச்சியுடன் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

நாடு முழுவதும் டிராக்டர் பேரணிகளும், இருசக்கர வாகனப் பேரணிகளும் நடைபெற்றன. டெல்லியில் நடந்த அந்தப் பேரணியின்போது ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் பேரணியிலிருந்து விலகிச் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்துதேசியக் கொடிக்கு அருகிலேயே வேறு ஒரு கொடியை ஏற்றிய சம்பவமும் இதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களும், விவசாயிகளின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதமாக பா.ஜ.க ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி என்பது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, போராட்டத்தை கைவிட்டு இன்று இரவுக்குள் விவசாயிகளின் தங்கள் மாநிலங்களுக்கு திரும்ப வேண்டும் என டெல்லி போலிஸார் கெடு விதித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் 4 மாநில போலிஸாரும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், டெல்லி காசிபூர் பகுதியில், மின்சாரம், குடிநீர் இணைப்புகள், மின் இணைப்புக்கள் என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து விவசாயிகள் பலரும் அப்புறப்படுத்தப்பட்டனர். காசிபூர் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் இல்லாததால், போலிஸார் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைத் தொடர்பாக, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், “என்ன நடக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் கண்காணிக்கட்டும். எந்த வன்முறையும் காசிபூரில் நடைபெற வில்லை. ஆனால் இரும்புத் தடிகளுடன் சூழ்ந்து கொண்டு, இடத்தை காலி செய்யுமாறு போலிஸார் மிரட்டுகின்றனர். இது உ.பி மாநில அரசின் கொடூரமான முகத்தை அப்பட்டமாக காட்டுகிறது.

தண்ணீர் இல்லையென்றால் எங்கள் சொந்த கிராமத்தில் இருந்து தண்ணீரைக் கொண்டுவந்து போராட்டத்தைத் தொடர்வோம். அதுமட்டுமல்லாது, குண்டர்களை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்காக துப்பாக்கி குண்டுகளையும் ஏற்க நான் தயார்” என்றார்.

அப்போது, அவரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து காசிபூர் எல்லையில் 150க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் வந்தடைந்தனர்.

இதே போல் ஹரியானா மாநிலத்தின் சோன்பேட் பகுதியில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக துணை ராணுவப்படையினரை காசிபூருக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

Also Read: “மக்கள் கனவு காணும் அரசாக.. கவலைகளைப் போக்கும் அரசாக தி.மு.க அரசு இருக்கும்” : மு.க.ஸ்டாலின் உறுதி!