India
ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு வாதம் : உ.பி. தீர்ப்பை சுட்டிக்காட்டிய பேரறிவாளன் தரப்பு!
பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வது பற்றி குடியரசுத்தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், தம்மை விடுதலை செய்யக்கோரிய வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தன்னை விடுதலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சி.பி.ஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ தரப்பு, எழுவர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டது. மேலும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி குடியரசுத்தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யாத நிலையில், குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று புதிய வாதத்தை முன்வைப்பதற்கு பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ள பெல்ட் வெடிகுண்டு வழக்கை குறிப்பிட்டு பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக ஆளுனர் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது சரியல்ல என்றும் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், உத்தர பிரதேச மாநில வழக்கு ஒன்றில் 20 ஆண்டுகால சிறை தண்டனை பெற்றவர்களை, முதல்முறையாக குற்றம் செய்தவர்கள் என்கிற அடிப்படையிலும், அவர்களுடைய நன்னடத்தை அடிப்படையிலும் உச்சநீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது. அதேபோல் பேரறிவாளனையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, பேரறிவாளன் வழக்கு விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை தமிழக அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் கேட்கவிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!