India

“குடியரசு தினத்தில் டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பேரணி” : விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க சதி !

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

உச்சநீதிமன்றமும் மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரத்தில், 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆனால், இந்த 4 பேரும் விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்பதால் இக்குழுவை விவசாயிகள் ஏற்கவில்லை.

மேலும், இக்குழுவில் 3 பேரை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். அத்துடன் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்து ஒத்திகையும் நடத்தியுள்ளனர்.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி போலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். குடியரசு தினநாளில் டெல்லியில் எந்த இடத்திலும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பது டெல்லி காவல்துறையின் மனு ஆகும்.

இந்த மனு மீதும் வல்லுநர் குழுவில் 3 பேரை நீக்க கோரும் மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஜனவரி 26-ம் தேதி போராட்டம் தொடர்பானஉத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே போராட்டத்திற்கு தயாராகும் வகையில், பஞ்சாப், ஹரியான மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் புறப்புட்டுள்ளனர். இந்த போராட்டங்களை எப்படியாவது சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக விவசாயிகள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: “மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்துவிடுவார்கள்” : துரைமுருகன் பேச்சு!