India

“தமிழின உணர்வை ஒடுக்க முற்படும் ஃபேஸ்புக்” - இலங்கை அரசின் கைக்கூலி என வைகோ கடும் விமர்சனம்!

சிங்கள அரசின் கைக்கூலி முகநூல், தமிழ் இன உணர்வை, எழுச்சியை ஒடுக்க முற்படுகின்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், “நவம்பர் 26 ஆம் நாள், தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாள். அதை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல் தளம், ஒரு நாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் முடக்கி வைத்தது. அந்த நாளில், ஆதரவு அற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் இல்லம் சென்று உணவு அளித்ததை நேரடியாக ஒளிபரப்பியவர், அடுத்த 60 நாள்களுக்கு, நேரடி ஒளிபரப்பு செய்யத் தடை விதித்து இருக்கின்றனர். இவை எல்லாம், பயங்கரவாத நடவடிக்கைகள் என, முகநூல் முத்திரை குத்துகின்றது.

ஆனால், 60 இலட்சம் யூதர்களைக் கொன்றதற்காக, இனப்படுகொலையாளன் என முத்திரை குத்தப்பட்டவரும், இரண்டாம் உலகப் போரின் விளைவாக 2.5 கோடி பேர் சாவுக்குக் காரணம் ஆனவரும், பல கோடிப் பேர் கை, கால்களை இழக்கவும் காரணமாக இருந்த ஹிட்லர் படத்தை, முகநூல் தளத்தில் பரப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதுபோலவே, இரண்டாம் உலகப் போர்க் குற்றவாளிகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளும், முகநூல் தளங்களில் விரிவாகக் காணக் கிடைக்கின்றன.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் இராஜபக்சே படத்தைப் பகிர எந்தத் தடையும் இல்லை. காந்தியைக் கொன்ற கோட்சே படத்தைப் போட்டு, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கும்பல் சூட்டுகின்ற புகழ் ஆரங்களுக்குத் தடை இல்லை. ஆனால், உலகத் தமிழர்களின் நம்பிக்கை விடி வெள்ளியாகத் திகழ்கின்ற தலைவர் பிரபாகரன் அவர்கள் படத்தைப் பகிர்ந்தால் முடக்குகின்றது முகநூல். அவ்வாறு அவரது படத்திற்கு, உலகில் இதுவரை எந்த நாடும் தடை விதித்தது இல்லை. ஆனால், முகநூல் மட்டும் தடை செய்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை, சிங்கள இனவெறி இராணுவம் இரவோடு இரவாக இடித்துத் தகர்த்துத் தரை மட்டம் ஆக்கியதைக் கண்டித்து, சென்னையில் உள்ள சிங்கள இனவெறி துணைத் தூதரகத்தின் முன்பு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் 11.1.2021 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு கருத்து உரை ஆற்றினர்; கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையை, சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக, பலரது முகநூல் கணக்குகளை, அந்தத் தளம் முடக்கி இருக்கின்றது. சிங்கள இனவெறி அரசின் கைக்கூலி ஆகி இருக்கின்ற முகநூல், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்துக் கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றது. சிங்கள இனவெறித் துணைத் தூதரகத்தைக் கண்டித்து, தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை, பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தி, மக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயற்சிக்கின்றது. தமிழ் இனப்படுகொலையை மறைக்கத் துணை போகின்றது.

சமூக வலைதளங்களுள், உலக அளவில் முதல் இடத்தைப் பெற்று இருக்கின்ற முகநூல் (facebook) நிறுவனத்தின் போக்கு, தான்தோன்றித் தனமாக ஆகி வருகின்றது. தாங்கள் வைத்ததே சட்டம், யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற இறுமாப்பும், ஆணவமும், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றன. முகநூலின் இந்தத் தான்தோன்றித்தனமான போக்கு நீடிக்குமானால், உலக நாடுகளின் இறையாண்மை கேள்விக்குறியாகி விடும். நாடுகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் இயற்றுகின்ற சட்டங்களை மதிப்பது இல்லை என, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முகநூல் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். பல நாடுகளில் முகநூல் தளத்திற்குப் பல கட்டுப்பாடுகளையும், பல கோடி ரூபாய் தண்டமும் விதித்து இருக்கின்றார்கள்.

எனவே, ஒவ்வொரு நாட்டிலும், தாங்கள் விரும்பியவாறு அரசுகள் அமைய வேண்டும் என்பதற்காக, முகநூல் தளம் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், முகநூல் தளத்தின் இந்திய உயர் அதிகாரி அங்கி தாஸ், ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்தது, வெட்ட வெளிச்சம் ஆனது. கண்டனைக் கணைகள் பாய்ந்தன. எனவே, வேறு வழி இன்றி அவரைப் பதவி நீக்கம் செய்தது.

Also Read: ஈழத் தமிழர்களுக்கான மாகாணங்களை ஒழிக்கும் இலங்கை அரசு; வேடிக்கை பார்க்கும் மோடி அரசு - டி.ஆர்.பாலு கண்டனம்

இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு அழைத்தபோது, முகநூலின் இந்திய அதிகாரிகள், விசாரணைக்கு வர மறுத்தனர். இவர்கள், தங்களுடைய சர்வர்களை, இந்தியாவில் நிறுவவும் இல்லை; இந்தியச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. உலக அளவில் பல செய்தி நிறுவனங்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கின்ற முகநூல் தளம், அவர்களுக்கு உரிய பங்கைத் தருவதும் இல்லை.

தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான வகையில் முகநூல் செயல்பட்டு வருகின்றது. தமிழகத் தலைவர்களைக் களங்கப்படுத்த முயற்சிக்கின்றது; அவர்களது கருத்துகளை திரைபோட்டு மறைக்கின்றது. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக முகநூல் தளம் இயங்கி வருகின்றது. உலகம் முழுமையும் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது.

எனவே, முகநூல் அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், முகநூலின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். குறிப்பாக, தமிழகச் சட்டமன்றத்திற்கு இத்தகைய அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன். வெற்று இடத்தைக் காற்று நிரப்பியே தீரும்; முகநூலுக்கு மாற்றுத் தளம் உருவாகியே தீரும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு - சிங்கள அரசிற்கு தக்கபாடம் புகட்ட வேண்டும்” : தலைவர்கள் பேச்சு!