India

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; மிகப்பெரிய அநீதி - TR.பாலு

இந்திய அஞ்சல் துறையில் தமிழை புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திராவிட முன்னேற்றக்கழக பொருளாளரும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி. ஆர். பாலு இன்று (13 ஜனவரி 2021) தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, மத்திய தபால் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“இந்திய அஞ்சல் துறையின், தமிழ் நாட்டு பிரிவிற்கு, கணக்காளர்களை துறைத்தேர்வு மூலம் தேர்வு செய்ய சென்னை மண்டல தலைமை தபால் துறை அதிகாரியினால் கடந்த ஜனவரி 2021 நான்காம் தேதியன்று வெளியிடப்பட்ட பொது அறிவிக்கையில் (NO.REP/12-2/2020) வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்வில், ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாகவுள்ளது கண்டு, தமிழக மக்கள் முழுவதுமாக அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோப்புப்படம்

கடந்த 2019ம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெறவிருந்த, நான்காம் நிலை பணியாளர்களுக்கான அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை தமிழக மக்கள் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தபோது, நடந்துவிட்ட தவறுதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறவிருந்த தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் நடந்த கூச்சல் குழப்பங்களுக்கு இடையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில், தபால் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்கள், தமிழ் மொழி உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் விரைவில் தேர்வு நடத்தப்படும் என உறுதியளித்தீர்கள்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது..... “நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, தமிழ் மொழி உள்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் மிகுந்த மரியாதையை அளித்து போற்றுகிறது, என்பதை இந்திய நாட்டு மக்களுக்கு, உங்கள் மூலமாகவும், இந்த நாடாளுமன்றத்தில் வாயிலாகவும் உறுதி கூறுகிறேன் எனவும், நான் தமிழ் நாட்டின் பொறுப்பாளாராக நானே செயல்பட்ட போதும், தமிழ் மொழி உள்பட மற்ற மொழிகளின் அன்பையும் மற்றும் ஆழத்தையும், அறிந்துள்ளேன். எனவே, அனைத்து மொழிகளுக்கான இந்திய அரசின் உறுதிப்பாடு முழுமையானதும் மற்றும் உளப்பூர்வமானதுமாகும்''

திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனின் சென்னை உயர்நீதிமன்ற, பொதுநல வழக்கின் போது, தமிழ் மொழி உள்பட அனைத்து மாநில மொழிகளில், அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளது. மேலும், மக்களாட்சியின் மிகப்பெரியத் துாண்களான, நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய இரண்டிலும் அளிக்கப்பட்ட உறுதிமொழி வேண்டுமென்றே, அஞ்சல் துறையினரால் முழுமையாக மீறப்பட்டுள்ளது, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்ததையும் அளித்துள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் தமிழாய்வு நிறுவனம் முடக்கம் : தமிழ் மொழி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் எடப்பாடி அரசு!

அஞ்சல் துறையில் கணக்காளர்களுக்காக நடைபெறவுள்ள தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி வாயிலக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் பணிபுரியும் இலட்சகணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்வில் இது மிகப் பெரிய பேரிடியாகவும் தாக்கியுள்ளது.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில், தமிழ் மொழி பயின்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, மிகப்பெரிய அநீதி மட்டுமில்லாமல், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறான கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானதாகும். தமிழ் நாட்டில் வாழ்ந்து, செம்மொழியாம் தமிழ் மொழியைப் பயின்றதால் வேலை வாய்ப்பற்ற தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு, இவ்வாறக தரப்படும் தண்டனை எந்தவகையிலும் நியாயமற்றதாகும். மேலும், தமிழ் மொழி மற்றும் தமிழ் இளைஞர்களின் உணர்வை மதிக்கும் வகையிலும், மாநிலங்களவையில் தாங்கள் அளித்த உறுதிமொழியை பாதுகாக்கும் வகையிலும், தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்டும் அவமானத்தையும் உடனடியாக தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, கடந்த ஜனவரி நான்காம் தேதியன்று அஞ்சல் துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழ்மொழி வாயிலாகவும் கணக்காளர்களுக்கான தேர்வு நடத்தப்படுமென புதிய அறிவிக்கை வெளியிட்டு, தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அஞ்சலக கணக்கர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட சதி?