India

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அவசர அவசரமாக தடுப்பூசி பயன்பாடு?” - மருத்துவர்கள் சந்தேகம்!

கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் முழுமையான சோதனைகளுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை (Herd Immunity) தடுப்பூசிகள் மூலம் பெற முடியும். முழுமையான பயனைப் பெற முடியும்.

இந்தியாவில் பயன் படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை முழுமையாக முடிக்காமல் தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது மக்களிடையே தடுப்பூசி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

மத்திய அரசு அரசியல் நோக்கத்திற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்காக அவசர அவசரமாக தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறது.

கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும். யார் யாருக்கு என்ன மருந்து செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: பல மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் குறைவாக பதிவான கொரோனா தொற்று! #CORONAUPDATES