India

போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க தலைவர் வீட்டு முன்பு சாணத்தை கொட்டி விவசாயிகள் பதிலடி!

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 39 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 6ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கடும் குளிர் கனமழை என பல இன்னல்களுக்கு இடையிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர். இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட பிறகும், பா.ஜ.க தலைவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவரும், முன்னாள் அமைச்சருமான திக்சன் சூட், ‘விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை; அவர்கள் டெல்லிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்’ என்று பேசினார்.

பா.ஜ.க தலைவரின் இத்தகைய பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் பா.ஜ.க தலைவர்களுக்கு பாடம் புகட்டவும், திக்சன் சூட் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஹோசியான்பூரில் உள்ள அவரது வீட்டுமுன்பு திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

அப்போது திக்சன் சூட் வாசலில் மாட்டுச் சாணத்தையும் மலைபோல கொட்டி பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திக்சன் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாஜகவின் பொய் செய்திகளுக்கு பதிலடி கொடுக்க சமூக வலைதளங்களிலும் களமிறங்கிய விவசாயிகள்!