India

“இது தாகூரின் மண்.. இங்கு வகுப்புவாத, வெறுப்பு அரசியல் எடுபடாது” - பாஜகவை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி!

பாஜக ஆட்சி புரியாத மாநிலத்தை கைப்பற்றுவதற்கு மோடியும் அமித்ஷாவும் தொடர்ந்து பல்வேறு சூழ்ச்சிகளை புரிந்து ஆளும் கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் தங்கள் கட்சி பக்கம் இழுக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற பதவிக்காலம் விரைவில் நிறைவுபெற இருப்பதால், அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், போல்பூரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவினர் வெறுப்பு அரசியலையும், போலியான அரசியலையும் மேற்குவங்கத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மாநிலத்தின் முதுகெலும்பை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ரவீந்திரநாத் தாகூர் மண். மதச்சார்பின்மையை அழித்துவிட்டு வகுப்புவாத அரசியலை கொண்டு வருவதற்கு இடமளிக்காது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி விடலாம். ஆனால், திரிணாமுல் காங்கிரஸை வாங்கிவிட முடியாது. அது நடக்காது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நட்சத்திர விடுதிகளில் தங்கி ஏழைகளுக்கான சீர்த்திருத்தங்களை பற்றி பேசுகிறார். இந்து மதத்தின் பெயரில் மக்களை முட்டாளாக்கி தவறான வழியில் நடத்துகிறார்.

இவ்வாறு மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.